தமிழ்நாட்டில் அக்டோ பர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக, திருச்சி தவிர சென்னை உள்பட 9 மாநகராட்சிகள், 60 நகரசபைகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்டடீபர் 17-ந் தேதி அன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 2-வது கட்டமாக மீதமுள்ள 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 19-ந் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
இவை தவிர தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 12 ஆயிரத்து 620 ஊராட்சிகளுக்கும் இந்த இரு நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கண்ட உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்த தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
நடைபெறவுள்ள இந்த உள்ளாட்சி தேர்தலில், இதுவரை இல்லாத அளவில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற 10-க்கு மேற்பட்ட கட்சிகள் தனித்தனியே வேட்பாளர் பட்டியலை அறிவித்து களம் இறங்கி உள்ளன.
இதனால் பலமுனை போட்டி ஏற்பட்டு உள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், செப்.22ஆம் தேதி தொடங்கியது. கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக இருந்ததால், தொடக்க நாட்களில் வேட்புமனு தாக்கல் மந்தமாகவே இருந்து வந்தது.
சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். நேற்று முன்தினம் வரை தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 25 ஆயிரத்து 700 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு, வருகிற 29ஆம் தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். நேற்று முதல் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய தொடங்கி விட்டனர்.
66 ஆயிரம் மனுக்கள்:
மனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நேற்று முதல் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு முழுவதும், நேற்று ஒரே நாளில் மட்டும் 66 ஆயிரம் மனுக்கள் குவிந்தன.
பலமுனை போட்டி ஏற்பட்டு, அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருவதால், இறுதி பட்டியலில் லட்சக்கணக்கில் வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சீபுரம்-திருவள்ளூர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், நேற்று ஒரே நாளில் 1025 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 1,227.
சென்னை மேயர் பதவி 6 பேர் போட்டி:
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி, தி.மு.க. சார்பில் தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அவர்கள் தவிர, சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் மற்றும் ஜே.ஹரிதாஸ், ஆர்.டி.சேகர், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய 4 சுயேச்சை வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்து உள்ளனர்.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நேற்று மட்டும் 92 பேர் மனு தாக்கல் செய்தனர்.
(டிஎன்எஸ்)
0 comments:
Post a Comment