பாலின்பக் கல்வி (Sex Education) தேவையா? தேவையற்றதா?


இன்று நம் சமுதாயம் செக்ஸ் எனும் மயக்க உலகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது, பல செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. கணவன்/மனைவி கள்ளத்தொடர்பு, பெற்ற பிள்ளைகளுடன் தகாத உறவு, ஆசிரியர் மாணவ முறைகேடு எனக் கூறிக் கொண்டே போகலாம். 15 வருடங்களுக்கு முன்பு கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட விசயங்கள் இப்போது அடிக்கடி நடக்கும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் முறையற்ற பாலின்பக் கல்வி இல்லாததே. இப்போது உள்ள பெற்றோரிடம் பாலின்பக் கல்வி வேண்டும் என்றால் கண்டிப்பாக அதை எதிர்ப்போரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். ஏன்? என்றால் சிறு வயதிலேயே செக்ஸ் பற்றி சொல்லிக் கொடுத்தால் கெட்டுப்போய் விடுவார்கள் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கும்.


SEX என்ற ஆங்கிலச் சொல்லை 'ஒரே அர்த்தத்துடன்' பார்க்கின்றனர் நிறைய பேர், அதுதான் SEX EDUCATION என்ற விசயத்தையும் தடுக்கிறது. SEX என்ற ஆங்கிலச் சொல்பல அர்த்தங்களை கொண்டுள்ளது. பாவம் உலகை ஆளும் ஆங்கிலத்திற்கு வார்த்தை பற்றாக்குறை போலும். எல்லா இடங்களிலும் அந்த ஒரு வார்த்தையை மட்டும் வைத்தே பிழைப்பை நடத்துகிறது ஆங்கிலம். தமிழ் மொழியில் தான் 2 லச்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் இருக்கிறது, என்ன செய்ய நாம் அதை தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. சரி விசயத்திற்கு வருவோம், SEX என்ற சொல்லுக்கு 'பால் , பால் வேறுபாடு, ஆண் பெண் பாகுபாடு , இனம்,  உடலுறவு , பாலியல் உறவு' என தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது. அதில் உடலுறவு , பாலியல் உறவு என்ற அர்த்தத்தை மட்டுமே நாம் மனதில் வைத்திருந்தால் அது நம் அறியாமை. அதனால் தான் தலைப்பில் 'பாலின்பக் கல்வி' என்று குறிப்பிட்டிருப்பேன்.

நமது கலாச்சாரம் போல் எந்த நாட்டிலும் இல்லை, ஆனால் அதை சரியாக சொல்லி புரியவைக்காமல், பல கட்டுப்பாடுகளை மட்டும் விதித்து இப்போது முறைகேடுகள் அதிகரித்துவிட்டது. எந்த ஒரு விசயத்தையும் அளவுக்கு அதிகமாக அடக்கினாலோ, இல்லை அடக்கு முறை மேற்கொண்டாலோ அது பெரிதாக ஒருநாள் வெடிக்கும். நம் நாட்டில் SEX என்பதில் அந்த முறையை தான் கையாளுகின்றனர். அதை வெறும் அந்தரங்கமான ஒன்றாக மட்டுமே சித்தரித்துவிட்டோம். அதை சரியான முறையில், சரியான வயதில் இருபாலருக்கும் கல்வியாக புரிய வைக்கவேண்டும். உடனே சில பேருக்குத் தோன்றும் 'சின்ன வயசிலேயே செக்ஸ் பத்தி சொல்லிகொடுப்பதா?', முட்டாள்தனமாக கூட தெரியும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டும் சொல்லி கொடுக்காமல் அதோடு நம் கலாச்சாரத்தையும், விழிப்புணர்வையும் கலந்து சொல்லிக் கொடுப்பதே நல்ல பாலின்பக் கல்வியாகும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டுமே பார்க்கும் முட்டாள்களுக்கு எதையும் சொல்லி புரியவைக்க முடியாது.

நமது கலாச்சாரத்தில் 'பெண்ணின் திருமண வயது 21'க்கு மேல் என்ற எண்ணம் உண்டு, அதை சாதரணமாக சொல்லிவிடவில்லை. அதை ஆட்டோக்களுக்கு பின்னால் மட்டுமே பார்த்துப் பழகிய நமக்கு ஏன் சொன்னார்கள் என்று முழுதாக தெரிந்து கொள்வதில்லை. ஒரு பெண் பருவம் அடைந்த உடன் திருமணம் என்று சொல்லாமல் ஏன் ஒரு வயதை நிர்ணயிக்க வேண்டும்? அந்த வயதிற்கு பிறகே ஒரு பெண் மனதாலும் உடலாலும் பக்குவமாகி தாம்பத்திய வாழ்க்கைக்கு தயாராகி விட்டாள் என்பதே அதன் அர்த்தம். பாலின்பக் கல்வியைதான் நமது கலாச்சாரதில் கலந்துவிட்டனர். பாலியல் குற்றங்கள், இளம் வயதில் கர்ப்பம், தகாத உறவு, தவறான உறவுகளால் வரும் பாலியல் நோய்கள், எய்ட்ஸ் ஆகியவற்றை தடுக்கவே நமது கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருந்து வருகிறது. அப்போது ஒளிவு மறைவாக அதை சொல்லிவைத்தனர், அதன் காரணம் ஒருவரின் முழு கவனமும் இதன் மீதே இருந்து கெட்டுப்போய்விடக்கூடாது என்பதே..அதே போன்று பால் உணர்வை தூண்டும் விசயங்கள் அந்த காலத்தில் அதிகமாக இல்லை. இப்போதோ ஊடகமும், சினிமாவும், இணையமும் போதும் கவர்ச்சி, ஆபாசம் காட்டி பாலுணர்வை தூண்ட . கட்டுப்பாடுகளை கொண்டுள்ள நாம் பாலுணர்வை தூண்டும் விசயங்களையும் கையில் வைத்துள்ளோம், இதனால்தான் மேலே கூறிய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முறையான பாலின்பக் கல்வி  அவசியம்.

பாலின்பக் கல்வி என்பது வெறும் உடலுறவு சார்ந்தது என்ற எண்ணத்தை முதலில் அகற்ற வேண்டும். அதன் குறிக்கோள் உடலுறவு சார்ந்த கெட்ட எண்ணங்களை, பழக்கங்களை நிறுத்தவேண்டும் என்ற நோக்கில் இருக்க வேண்டும். தகாத வயதில் அதை மேற்கொண்டால் அதன் விளைவு மனதளவிலும் உடலளவிலும் எவ்வாறு இருக்கும் என புரியவைத்தல் வேண்டும். அதை எந்த வயதில் எந்த நேரத்தில் எப்படி மேற்கொள்வது என சரியாக மற்றும் முறையாக விளக்க வேண்டும். அதோடு நம் கலாச்சாரத்தையும் நன்கு புகுத்த வேண்டும். எதனால் அது தவறு, எப்போது அது சரி என சொல்விளக்கம் வேண்டும்.


எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, முதலில் இதை பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தால் நல்லது. அதுவும் அவர்கள் பருவ வயது அடையும் காலத்தில் அதன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் இதனை பாடமாக கொண்டுவரும் பட்சத்தில் சில கற்பிக்கும் முறைகளை கையாளவேண்டும். முதலில் பாடத்தில் வரும் விளக்கமோ படமோ பால் உணர்வை தூண்டாத விதத்தில் இருக்க வேண்டும், இதற்கு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் பரிசீலிப்பது நல்லது. சில பகுதிகளாக பிரித்து அந்த வயதிற்கற்ற கல்வியை கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களும் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களும் எடுக்கலாம். பாலுணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்தால் அதற்கு சிறந்த மனோதத்துவ நிபுணரிடம்  மாணவர்களுக்கு தகுந்த புத்திமதிகளை கூற வேண்டும். 

கலாச்சார பின்னனியோடு இவ்வாறு பின்பற்றினால் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், ஆனால் இதனை உடனே செயல்படுத்த முடியாது. ஏனெனில், பாலின்பக் கல்வி பெறாத ஆசிரியர்கள் தான் இப்போது உள்ளனர். இதனை பெற்றோர்கள் மூலமாக இப்போது கொடுப்பதே நல்லது. இதன் விளைவு, விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தவேண்டும். 2 அல்லது 3 தலைமுறைக்கு பிறகு பாலின்பக் கல்வி பெற்ற, பக்குவமடைந்த நல்ல ஆசிரியர்களும் இதனை எடுத்துக்கூறலாம். வளரும் சமுதாயம் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமுமே உள்ளது, கவனமாக ஒழுக்கத்துடன் வளர்த்தால் கண்டிப்பாக நல்ல சமுதாயமும் கலாச்சாரமும் இருக்கும் (கிடைக்கும்).

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content