தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

பாலின்பக் கல்வி (Sex Education) தேவையா? தேவையற்றதா?


இன்று நம் சமுதாயம் செக்ஸ் எனும் மயக்க உலகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது, பல செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. கணவன்/மனைவி கள்ளத்தொடர்பு, பெற்ற பிள்ளைகளுடன் தகாத உறவு, ஆசிரியர் மாணவ முறைகேடு எனக் கூறிக் கொண்டே போகலாம். 15 வருடங்களுக்கு முன்பு கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட விசயங்கள் இப்போது அடிக்கடி நடக்கும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் முறையற்ற பாலின்பக் கல்வி இல்லாததே. இப்போது உள்ள பெற்றோரிடம் பாலின்பக் கல்வி வேண்டும் என்றால் கண்டிப்பாக அதை எதிர்ப்போரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். ஏன்? என்றால் சிறு வயதிலேயே செக்ஸ் பற்றி சொல்லிக் கொடுத்தால் கெட்டுப்போய் விடுவார்கள் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கும்.


SEX என்ற ஆங்கிலச் சொல்லை 'ஒரே அர்த்தத்துடன்' பார்க்கின்றனர் நிறைய பேர், அதுதான் SEX EDUCATION என்ற விசயத்தையும் தடுக்கிறது. SEX என்ற ஆங்கிலச் சொல்பல அர்த்தங்களை கொண்டுள்ளது. பாவம் உலகை ஆளும் ஆங்கிலத்திற்கு வார்த்தை பற்றாக்குறை போலும். எல்லா இடங்களிலும் அந்த ஒரு வார்த்தையை மட்டும் வைத்தே பிழைப்பை நடத்துகிறது ஆங்கிலம். தமிழ் மொழியில் தான் 2 லச்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் இருக்கிறது, என்ன செய்ய நாம் அதை தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. சரி விசயத்திற்கு வருவோம், SEX என்ற சொல்லுக்கு 'பால் , பால் வேறுபாடு, ஆண் பெண் பாகுபாடு , இனம்,  உடலுறவு , பாலியல் உறவு' என தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது. அதில் உடலுறவு , பாலியல் உறவு என்ற அர்த்தத்தை மட்டுமே நாம் மனதில் வைத்திருந்தால் அது நம் அறியாமை. அதனால் தான் தலைப்பில் 'பாலின்பக் கல்வி' என்று குறிப்பிட்டிருப்பேன்.

நமது கலாச்சாரம் போல் எந்த நாட்டிலும் இல்லை, ஆனால் அதை சரியாக சொல்லி புரியவைக்காமல், பல கட்டுப்பாடுகளை மட்டும் விதித்து இப்போது முறைகேடுகள் அதிகரித்துவிட்டது. எந்த ஒரு விசயத்தையும் அளவுக்கு அதிகமாக அடக்கினாலோ, இல்லை அடக்கு முறை மேற்கொண்டாலோ அது பெரிதாக ஒருநாள் வெடிக்கும். நம் நாட்டில் SEX என்பதில் அந்த முறையை தான் கையாளுகின்றனர். அதை வெறும் அந்தரங்கமான ஒன்றாக மட்டுமே சித்தரித்துவிட்டோம். அதை சரியான முறையில், சரியான வயதில் இருபாலருக்கும் கல்வியாக புரிய வைக்கவேண்டும். உடனே சில பேருக்குத் தோன்றும் 'சின்ன வயசிலேயே செக்ஸ் பத்தி சொல்லிகொடுப்பதா?', முட்டாள்தனமாக கூட தெரியும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டும் சொல்லி கொடுக்காமல் அதோடு நம் கலாச்சாரத்தையும், விழிப்புணர்வையும் கலந்து சொல்லிக் கொடுப்பதே நல்ல பாலின்பக் கல்வியாகும். அதை வெறும் உடலுறவு சார்ந்ததாக மட்டுமே பார்க்கும் முட்டாள்களுக்கு எதையும் சொல்லி புரியவைக்க முடியாது.

நமது கலாச்சாரத்தில் 'பெண்ணின் திருமண வயது 21'க்கு மேல் என்ற எண்ணம் உண்டு, அதை சாதரணமாக சொல்லிவிடவில்லை. அதை ஆட்டோக்களுக்கு பின்னால் மட்டுமே பார்த்துப் பழகிய நமக்கு ஏன் சொன்னார்கள் என்று முழுதாக தெரிந்து கொள்வதில்லை. ஒரு பெண் பருவம் அடைந்த உடன் திருமணம் என்று சொல்லாமல் ஏன் ஒரு வயதை நிர்ணயிக்க வேண்டும்? அந்த வயதிற்கு பிறகே ஒரு பெண் மனதாலும் உடலாலும் பக்குவமாகி தாம்பத்திய வாழ்க்கைக்கு தயாராகி விட்டாள் என்பதே அதன் அர்த்தம். பாலின்பக் கல்வியைதான் நமது கலாச்சாரதில் கலந்துவிட்டனர். பாலியல் குற்றங்கள், இளம் வயதில் கர்ப்பம், தகாத உறவு, தவறான உறவுகளால் வரும் பாலியல் நோய்கள், எய்ட்ஸ் ஆகியவற்றை தடுக்கவே நமது கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருந்து வருகிறது. அப்போது ஒளிவு மறைவாக அதை சொல்லிவைத்தனர், அதன் காரணம் ஒருவரின் முழு கவனமும் இதன் மீதே இருந்து கெட்டுப்போய்விடக்கூடாது என்பதே..அதே போன்று பால் உணர்வை தூண்டும் விசயங்கள் அந்த காலத்தில் அதிகமாக இல்லை. இப்போதோ ஊடகமும், சினிமாவும், இணையமும் போதும் கவர்ச்சி, ஆபாசம் காட்டி பாலுணர்வை தூண்ட . கட்டுப்பாடுகளை கொண்டுள்ள நாம் பாலுணர்வை தூண்டும் விசயங்களையும் கையில் வைத்துள்ளோம், இதனால்தான் மேலே கூறிய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முறையான பாலின்பக் கல்வி  அவசியம்.

பாலின்பக் கல்வி என்பது வெறும் உடலுறவு சார்ந்தது என்ற எண்ணத்தை முதலில் அகற்ற வேண்டும். அதன் குறிக்கோள் உடலுறவு சார்ந்த கெட்ட எண்ணங்களை, பழக்கங்களை நிறுத்தவேண்டும் என்ற நோக்கில் இருக்க வேண்டும். தகாத வயதில் அதை மேற்கொண்டால் அதன் விளைவு மனதளவிலும் உடலளவிலும் எவ்வாறு இருக்கும் என புரியவைத்தல் வேண்டும். அதை எந்த வயதில் எந்த நேரத்தில் எப்படி மேற்கொள்வது என சரியாக மற்றும் முறையாக விளக்க வேண்டும். அதோடு நம் கலாச்சாரத்தையும் நன்கு புகுத்த வேண்டும். எதனால் அது தவறு, எப்போது அது சரி என சொல்விளக்கம் வேண்டும்.


எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, முதலில் இதை பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தால் நல்லது. அதுவும் அவர்கள் பருவ வயது அடையும் காலத்தில் அதன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் இதனை பாடமாக கொண்டுவரும் பட்சத்தில் சில கற்பிக்கும் முறைகளை கையாளவேண்டும். முதலில் பாடத்தில் வரும் விளக்கமோ படமோ பால் உணர்வை தூண்டாத விதத்தில் இருக்க வேண்டும், இதற்கு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் பரிசீலிப்பது நல்லது. சில பகுதிகளாக பிரித்து அந்த வயதிற்கற்ற கல்வியை கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களும் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களும் எடுக்கலாம். பாலுணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்தால் அதற்கு சிறந்த மனோதத்துவ நிபுணரிடம்  மாணவர்களுக்கு தகுந்த புத்திமதிகளை கூற வேண்டும். 

கலாச்சார பின்னனியோடு இவ்வாறு பின்பற்றினால் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், ஆனால் இதனை உடனே செயல்படுத்த முடியாது. ஏனெனில், பாலின்பக் கல்வி பெறாத ஆசிரியர்கள் தான் இப்போது உள்ளனர். இதனை பெற்றோர்கள் மூலமாக இப்போது கொடுப்பதே நல்லது. இதன் விளைவு, விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தவேண்டும். 2 அல்லது 3 தலைமுறைக்கு பிறகு பாலின்பக் கல்வி பெற்ற, பக்குவமடைந்த நல்ல ஆசிரியர்களும் இதனை எடுத்துக்கூறலாம். வளரும் சமுதாயம் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமுமே உள்ளது, கவனமாக ஒழுக்கத்துடன் வளர்த்தால் கண்டிப்பாக நல்ல சமுதாயமும் கலாச்சாரமும் இருக்கும் (கிடைக்கும்).

பெண்களுக்கு உண்மையாக பிடித்தது என்ன ?


பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள்  நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள்  வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.


6. கட்டுப்பாடு:  உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை:  விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

3. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

7. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

9. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.


21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக்கிறது, “டிவி’ யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

நன்றி - ஆர் சௌந்தர ராஜன் - பெங்களுரு 

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 2

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1 முதல் பாகம்


முதல் பாகத்தில் முடியை பற்றி அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்த்தோம், இப்போது முடி உதிர்வின் காரணங்களை பார்ப்போம்.

ஒரு கேசத்தின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அது உதிர்ந்து விடும், அடுத்து பிற வேர்களிலிருந்து புதிய கேசம் வளரும். இவ்வாறு பழைய கேசம் உதிர்வதும் வளர்வதும் அன்றாடம் நடக்கும். உதிரும் அளவும் வளரும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக உதிர்வது அதிகாமாக இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இயல்பாகவே 70 முதல் 100 கேசங்கள் வரை உதிர்ந்து விடும். பெண்கள் தலை வாரும் போது 10-20 கேசங்கள் வருவது இயல்பான ஒன்று. கொத்துக் கொத்தாக உதிர்வது இயல்பை மீறிய ஒன்று, அதன் காரணங்களை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.



காரணங்கள்


கேசம் அதிகமாக உதிர சில முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன,

  1. சரியான பராமரிப்பின்மை
  2. மருந்துகள்
  3. போதைப் பொருட்கள்
  4. இயக்கநீர் மாற்றங்கள்
  5. ஊட்டச்சத்து குறைபாடுகள்
  6. உடலை தாக்கும் நோய்கள்
  7. தலையின் தோலை தாக்கும் நோய்கள்
  8. மரபு வழிக் காரணம்
  9. மன அழுத்தம்
  10. வயது
  11. கதிர்வீச்சுகள்
  12. வேதியியல் பொருட்கள்


ஒருவருக்கு அதிகமாக முடி உதிர்வது மேற்கண்ட ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணமாக கூட இருக்கலாம், சரியான காரணத்தை தெரிந்து கொள்ளுதல் சரி செய்ய உதவும்.

1 சரியான பராமரிப்பின்மை

மிக முக்கியமான காரணம் இதுவே ஆகும்.
தலையில் எண்ணெய் பிசுக்குடன், தூசி ஆகியவற்றை சுத்தம் செய்யாதிருத்தல்.
குளித்தபின் ஈரத்தலையை வாருதல்.
தலையை சுத்தம் செய்ய வீரியம் மிகுந்த தரக் குறைவான ஷாம்பூகளை உபயோகித்தல்.
ப்ளீச்சிங்க்,  பெர்மிங்க், கர்லிங் ஆகியவற்றை அடிக்கடி செய்தல்.
அடிக்கடி கேசச் சாயம் பூசுதல், தரமில்லாத சாயம் உபயோகித்தல்.
தரமற்ற சீப்புகளை பயன்படுத்துதல், அவற்றை சுத்தமில்லமல் உபயோகித்தல்.
ஹேர் டிரையரை சரியான முறையில் உபயோகிக்காமல் இருப்பது.
கேசத்தை இருக்கமாக கட்டுதல்.

2. மருந்துகள்

வீரியம் மிகுந்த மாத்திரை மருந்துஅள் தொடர்ந்து உண்பது.
புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகள்.
இரத்த உறைவை தடுக்கும் மருந்துகள்.
ஸ்டெராய்ட் வகை மருந்துகள்.
சில நோய்க் கொல்லி மருந்துகள்.

 3. போதைப் பொருட்கள்


புகையிலை அதிகாமாக உபயோகப்படுத்துதல், புகையிலையில் உள்ள நிகோட்டின் முடியின் வேரை சுற்றியுள்ள இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்துவிடும், இதனால் இரத்த ஓட்டம் குறையும். தேவையான ஊட்டச்சத்துக்கள் முடிக்கு கிடைகாமல் போய்விடும்.

4. இயக்க நீர் மாற்றங்கள்

உடலில் ஏற்படும் பலவகை மாற்றங்கள் முடி வள்ர்ச்சியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும், இரண்டிற்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கே இந்த மாற்றங்கள் அதிகமாக இருக்கிறது.

பருவம் அடையும் வயதில்
மாதவிடாய் காலத்தில்
கருவுறும் போது
பிரசவத்திற்கு பின்
மாதவிடாய் நின்றபின்

ஒவ்வொரு நிலையிலும் பலவித இயக்கநீர் மாற்றங்கள் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படுவதால், கேச வளர்ச்சி பாதிப்பு , உதிர்தல் ஏற்படுகிறது. பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற இயக்க நீர் கேச வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 15 - 30 வயதில் இந்த இயக்க நீர் அதிகமாக இருக்கும், அப்பருவத்தில் கேசம் அதிகமாக வளரும். மாதவிடாய் நின்ற பின்னர் இந்த ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் கேச உதிர்வு அதிகமாக இருக்கும்.

5. ஊட்டச்சத்துக் குறைபாடுகள்


கேசம் நன்கு வளரவும், வேர்கள் உறுதியாக இருக்கவும் உடலில் தேவையான அளவில் கீழ்காணும் சத்துகள் இருப்பது அவசியம்
புரதம்
பி. காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்
இரும்புச் சத்து
தாமிரம்
துத்தநாகம்
அயோடின்
வைட்டமின் சி

இதில் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தாலும் கேசம் அதிகமாக உதிரும்.

6.  உடலை தாக்கும் நோய்கள்


டைபாய்டு, மஞ்சள் காமாலை, அம்மை, புற்றுநோய், காசநோய் போன்ற நாள்பட்ட நோய்களால் உடல் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் கேசம் அதிகமாக உதிரும்.

நோயின் கடுமையால் சரியான் உணவு உண்ணமுடியாத நிலையில் முடி வலுவிழந்து விடுகின்றன.
தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதாலும் கேசம் உதிரும்.
அதிக நாட்கள் காய்ச்சலினாலும் உடல் சூட்டினால் கேசம் அதிகமாக உதிரும்.

தொடரும்...


அடுத்த பாகத்தில் மற்ற காரணங்களை பார்க்கலாம்.

தலை முடி உதிர்வை தவிர்க்கும் வழிகள் : 1


கேசத்தின் அடிப்படை

கேசம் ஏன் உதிருகிறது என்பதை தெரிந்து கொள்ள கேசம் குறித்த சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். நமது கேசம் இறந்த திசுக்களால் ஆன மெல்லிய ஆனால் உறுதியான ஒரு பாகம். இவை கெராட்டின் என்ற ஒரு வகை புரதத்தால் உருவானவை.

உள்ளமைப்பு

கேசத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்

1. தோலுக்கு வெளியே
2. தோலுக்கு உள்ளே

தோலுக்கு வெளியே இருக்கும் பகுதியின் பெயர் கேசத் தண்டு (Hair Shaft) ,  தோலுக்கு உள்ளே இருக்கும் பகுதியின் பெயர் கேச வேர் (Hair Root). கேசத் தண்டில் மெடுலா (Medula)எனும் உட்பகுதி, கார்டெக்ஸ் (Cortex) எனும் வெளிப்பகுதி உள்ளது. கேச வேர்களில் அடிப்பகுதி பெரிதா இருக்கும் அதை கேசக் குமிழ் (Hair Bulb) என்கிறோம், அது  பாலிக்கிள் (Hair Follicle) என்ற பகுதியோடு இணைந்திருக்கும். பாலிக்கிள் பகுதியில் உள்ள ரத்த குழாய்கள் வழியாக வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்கிறது.

கேசவேரோடு எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, (Sebaceous Glands) இந்த எண்னெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் திரவம் கேசத்திற்கு மினுமினுப்பை தருகிறது, சுரப்பிகள் சரியாக இயங்காவிடில் எண்ணெய் பசையின்றி வறண்டு போய் விடும். அதிகமாக இயங்கினால் எண்னெய் பிசுக்குடன் இருக்கும்.

கேசத்தின் நிறம் அதிலுள்ள மெலனின் என்ற வேதிப் பொருள் அளவை பொறுத்து மாறுபடும்.  வயதாகும் போது இது குறைவதால் நரை ஏற்படுகிறது. கேசத்தின் வளர்ச்சியில் மூன்று நிலைகள் உள்ளன அவை வளரும் பருவம், இடைப்பருவம், ஓய்வுப் பருவம் ஆகும். வளரும் பருவத்தில் புதிய கேசம் உருவாகி வளர்ந்து வரும், அடுத்த பருவத்தில் வளரும் வேகம் குறையும். மூன்றாம் பருவத்தில் வளர்ச்சி நின்று உதிர்ந்து விடும். சில மாதங்கள் கழித்து மீண்டும் புதிய கேசம் வளரும்.

அடுத்த பாகத்தில் முடி உதிர்வுக்கான காரணங்களை பார்க்கலாம்

ரஜினியின் உடல்நலத்தை கெடுத்தது என்ன?

ரஜினியின் உடல்நலத்தை கெடுத்தது அவரிடமிருந்த புகைப்பழக்கமும் ஒரு காரணம், இதனை மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். ர‌ஜினிக்கு இரைப்பை மற்றும் குடல் அழற்சி, நுரையீரல் பாதிப்பு, நிமோனியாவாலும் பாதிப்பு இருந்தது,  இப்போது அவர் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு பெற்று நலமாகி வருகிறார், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. இதன் மூலம் சொல்ல வந்தது, நுரையீரல் பாதிப்புக்கு காரணம் புகைப்பழக்கமே. அதற்காக ரஜினி ரசிகர்களை ஏமாற்றவில்லை முழுவதுமாக படித்துவிட்டுப் பாருங்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம். புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஒரு குறிப்பு. புகைப்பழக்கம் அதன் விளைவுகள் பற்றி எவ்வளவோ விழிப்புணர்வுகள் கொடுத்தாகிவிட்டது இருந்தும் அதன் மீது நடத்தப்படும் ஆராய்சிகள் குறைந்தபாடில்லை. காரணம் புகைப்பழக்கத்தின் அடிமைகள் பெருகிக் கொண்டே போவதுதான். அண்மையில் நடத்தப்ப ஆய்வில் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. புகைப்பழக்கம் எல்லா வயதினரையும் பாதிக்கிறது குறிப்பாக நடுத்தர வயது உடையவர்கள் மூளை சுருங்கும் தன்மைக்கு ஆளாகிறார்கள். 50 முதல் 60 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களது மூளையின் வெள்ளைத்திசுவில் மாற்றம் அல்லது ரத்தக் குழாயில் சிறிய பாதிப்பு ஏற்படுவதும். திட்ட மிடுதல் மற்றும் முடிவெடுத்தல் போன்ற வற்றில் மிகவும் பின்தங்கியுள்ளதும் தெரியவந்தது.

இது என்னவோ நடுத்தர வயதுக்காரர்களுக்கு மட்டும்தானே நமக்கென்ன என்று நினைக்கும் மற்றவர்களுக்கு பொதுவான பாதிப்புகளை தெரிந்துகொள்ள மேலே படிக்கவும்.

எல்லோரும் புற்றுநோய் வரும், நுரையீரல் பாதிப்பு வரும்னு சொல்வாங்க இன்னும் தெரிஞ்சுக்க எவ்வளவோ இருக்கு. சிகரட்டில் பாக்டீரியா இருக்குன்னு கண்டுபிடிச்சுருக்காங்க அமெரிக்கர்கள் அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி. ஆனா இந்தியாவுல இதபத்தி பெருசா விழிப்புணர்வு ஏற்படல.

ஆய்வில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பல நிறுவன சிகரெட்டுகளில் மனிதர்களை தாக்குகிற கொடிய பாக்டீரியாக்கள் இருந்தது ஓர் அதிர்ச்சி. அதுமட்டுமில்லாமல், இதில் இருக்கும் பாக்டீரியாக்கள் கொடிய நோய்கள் ஏற்படுத்துவதோடு, வருடக்கணக்கில் உடம்பில் தங்கி பல வகை நோய்களையும் உண்டாக்கும்  என்பது அதிர்ச்சி தகவல்.

அதில் கண்டெடுக்கப்பட்ட பாக்டீரியாக்களும் அதன் விளைவுகளும் :

பெசில்லஸ் (Bacillus) - உணவு சம்பந்தப்பட்ட நோய்கள்.
சூடோமோனாஸ் ஏருஜினோசா (Pseudomonas aeruginosa) - தொற்று நோய்களை ஏற்படுத்துபவை.
அசினோபாக்டர் (Acinetobactor) - நுரையீரல், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள்.
பர்கோல்டீரியா (Burkholderia) - சுவாசக் குழாய் சம்பந்தப்பட்ட  நோய்கள்.

இது போக இன்னும் சில பாக்டீரியாக்களும் இருப்தாக அந்த ஆய்வு தெரிவித்தது. ஒரே ஒரு சிகரெட் பிடித்தால் கூட அதன் விளைவு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது நம் உடம்பில் உள்ள இரத்தநாளங்களை 25 சதவீதம் விரைத்துப்போகிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம் தடைபடுகிறது, இருதயம் கடுமையாக வேலை செய்தால் மட்டுமே ரத்த ஓட்டம் சீராகும் என்று தெரியவந்துளளது. இப்படி இரத்தநாளங்கள் விரைத்துப்போவது அதிகமானால் மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரத்தநாளங்கள் விரைத்துப்போவதினால் சாதாரணமாக ஓடுவது, படிக்கட்டுகளில் ஏறுவது மாதிரியான தினசரி செய்யும் செயல்கள் கூட நமக்கு மிகுந்த சிரமத்தை, அதிக மூச்சிறைப்பை ஏற்படுத்தும். புகைப்பழக்கம் இருக்கும் ஆண்களை விட பெண்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக இருதய நோய் ஆபத்து இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

புகையிலையில் நிக்கோடின் என்னும் நச்சுப்பொருள் இருப்பது தெரியும். அது காற்றில் கலந்துவிடுகிறது என்பதும் தெரியும். அதனால் அருகில் இருப்பவர்கள் கூட அதிக பாடதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதும் தெரியும். தெரியாத மற்றொன்று, நிக்கோடின் காற்றில் கலந்தது போக மீதமுள்ள நிக்கோடின் புகையானது வீட்டின் சுவர்கள், தரை, தரைவிரிப்புகள், மேஜை, நாற்காலி போன்ற பொருட்களில் படிந்து விடுகின்றன. அப்படிப் படியும் நிக்கோடின் புகை நாட்கள், வாரங்கள், மாதக் கணக்கில் படிந்த பொருள்களின் மீதே தங்கிவிடுகின்றன. இதனால் பாதிப்பு பெரியவர்களை விட குழந்தைகளுக்குத்தான். இப்படி படியும் நிக்கோடின் காற்றில் இருக்கும் நைட்ரஸ் அமிலத்துடன் (Nitrous acid) கலப்பதால். கார்சினோஜென் (Carcinogen) எனும் நச்சுப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை ஆகும். ஒரு சிகரெட்டில் சுமார் 100 நேனோகிராம் அளவு கார்சினோஜென் நச்சுப்பொருள் இருக்கிறது.

இதுக்கு மேலயும் புகைப்பழக்கத்தை குறைக்கிறதும் அப்புறம் விடறதும், உங்க கையிலதான் இருக்கு.
இதனை உங்கள் (புகைப்பிடிக்கும்) நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாமே

ரஜினியை தலைப்பில் போட்டுவிட்டு ஒன்றும் இல்லை என நினைக்க வேண்டாம் அறிய படங்கள் கீழே













சமூக வலைபின்னல் ஆபத்தானதா?? பயனுடையதா??


ஒரு காலத்தில் மக்கள் தொலைத்தொடர்பிற்காக ஒற்றன், புறா, கடிதம் போன்றவற்றை பயன்படுத்தினர். சற்று முந்திய தலைமுறை வரை தொலைபேசி மற்றும் கைப்பேசியினை பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போதய தலைமுறை இணைய தளத்தையும், சமூக வலைபின்னல் வலைதளத்தினை (Social Networking website) பயன்படுத்துகிறார்கள்,
இந்த வலைபின்னல் மூலம் ஒருவரின் கருத்துக்கள் மிக வேகமாக அனைவரையும் சென்று சேருகின்றன. இதன் பயன்பாடு சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களை ஆட்டி படைக்கின்றன.

இன்று இந்த சமூக வலைபின்னல் வசதி இல்லாத கைப்பேசிகளே இல்லை எனலாம். காரணம் அந்த அளவிற்கு இந்த இளைய சமுதாயம் அதில் மூழ்கி கிடக்கின்றனர். அப்படி என்னதான் அந்த வலைபின்னல் சேவையைய் தருகிறது.

சமூக வலைபின்னல் நாம் எங்கேயோ, எப்போதோ கண்மூடி திறக்கும் கணத்தில் தொலைத்த முகங்களையும், காலத்தின் கட்டாயத்தால் பிரிந்த முகத்தினையும், உலகத்தின் உறவை ஒருசேர ஒற்றை முகமாய் சிரித்தபடி நம்முன் கொண்டு வருகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

இவைகளில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளையும், ஆங்காங்கே நிகழும் நிகழ்வுகளையும் பதிவு செய்வதன் மூலம் அனைவருக்கும் மிக விரைவான கருத்து பரிமாற்றமும், அறிவியல் சிந்தனை வளரவும் வழிவகுக்கிறது.

லிபியா நாட்டின் புரட்சிக்கு இந்த சமூக வலைபின்னலின் 14 அங்கத்தினர் அனுப்பிய வேண்டுகோள் தான் காரணம். அந்த புரட்சிதான் அந்த நாட்டின் மக்களை இராணுவ ஆட்சியிலிருந்து விடுவித்தது. அது மட்டுமின்றி 2ஜி ஸ்பெக்ட்ரம் (2 ஆம் அலைவரிசை) ஊழல் வெளிப்படவும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட ஒரு 10 விழுக்காடு காரணமாக விளங்கியது என்றால் அது மிகை ஆகாது.

அண்ணா ஹசரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு திரண்டமைக்கு இந்த சமூக வலைபின்னலின் மிகவும் பங்கு வகித்தது.

ஒருபுறம் இதன் பயனை அடிக்கொண்டே போவதை போல இதனால் விளையும் சமூக சீர்க்கேடுகளையும் அடிக்கொண்டே போகலாம். தற்போதய ஆய்வரிக்கையின்படி பள்ளி மாணவர்களும், இளைய சமூகத்தினார்களும் சராசரியாக நாளோன்றுக்கு 2 முதல் 5 மணி நேரம் வரை சமூக வலைபின்ன செலவிடுகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி கேள்விக்குறியாகிறது.

இளைய சமுதாயத்தினர் சாட் (chat) எனப்படும் தொகுப்பு உரையாடலில் நீண்ட நேரம் செல்விடுவதால் மன ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேருகின்றது. அது மட்டுமில்லாமல் சில நேரங்களில் அவர்கள் எல்லை மீறவும் தயங்குவதில்லை.

இது போன்ற சமூக வலைபின்னல் தளங்களில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மற்றும் புகைப்படம் (Personal Data and Photo), ஹாக்கர்ஸ் (Hackers) என்று அழைக்கபடும் கணினி தகவல் திருடன் இது போன்ற தகவல்களை திருடி தேச விரோத மற்றும் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

ஆகையால் அறிவியல் வளர்ச்சியும், தொழில் நுட்ப வளர்ச்சியும் இயல்பாண நிகழ்வுகளே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திணை கருத்தில் கொண்டு பிள்ளைகளின் செயல்பாட்டில் கவனம் கொள்ளவும்.

நன்மையும், தீமையும் பிறர் தர வாரா!!

செல்லப் பிராணி வளர்ப்பவரா நீங்கள்?

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்தல் அதன் மீது உள்ள ஆர்வம், அன்பு, பொழுதுபோக்கு என ஏதேனும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதனை சரி வர வளர்ப்பதும், கவனிப்பதும், ஆரோக்கியமாக பாதுகாப்பதும் ஒரு சிலரே. நாய் மற்றும் பூனை வளர்ப்பவர்கள் இதனை தொடர்ந்து படிக்கலாம். மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

நமக்கு சர்க்கரை நோய் வருவது போல், நாம் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய், பூனைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரும். இது எத்தனை பேருக்கு தெரியும்.

மனிதர்களை போலவே மிருகங்களுக்கும் சர்க்கரை நோய் கண்டறியபடுகிறது. இரத்தத்தில் குளுகோஸின் அளவை பொறுத்தே சர்க்கரை நோயின் அறிகுறிகள் சொல்லப்பப்படுகிறது. இன்சுலின் (கணையநீர்) எனப்படும் சுரப்பிதான் குளுகோஸின் அளவையும், குளுகோஸினை உறியும் உயிர் அணுகளையும் கட்டுபடுத்துகின்றது. இன்சுலின் குறையும் போதோ, உயிர் அணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காமல் போகும் போதோ சர்க்கரை நோய் அதிகமாகிறது.

பிராணிகளை பொருத்தவரை சர்க்கரை நோய் வருவது நடுத்தர வயதில்தான் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதிகமாக இது பெண் நாய்களிடம், அதுவும் ஒரு சில வகைகளுக்கு மட்டும் வருகிறது. பூனைகளை பொருத்தவரை ஆண் பெண் இரண்டுக்கும் இது பொருந்தும்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

அதிகமாக தண்ணீர் அருந்துவது
வழக்கத்திற்கு அதிகமாக சிறுநீர் கழித்தல்
வழக்கத்திற்கு அதிகமாக சாப்பிடுதல்
உடல் எடை குறைதல்
தோல் பாதிப்பு

இவைகளில் ஒன்று தோன்றினாலும் மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுங்கள், அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வது நல்லது.

சிறிதளவு பாதிப்பு இருந்தால் அதனை எளிதில் குணப்படுத்தி விடலாம். கட்டுப்பாடான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி இருந்தால் போதும். இருப்பினும் குளுகோஸின் அளவை சீறாக கொண்டுவர இன்சுலின் ஊசிகளை பின்பற்ற வேண்டும். தவறாத பரிசோதனை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவை அனைத்தும் உங்கள் பிராணியை ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு உதவும்.

எந்த பிராணியாக இருந்தாலும் நம் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்கள் அவைகளுக்கு நச்சு/விஷத்தன்மையை ஏற்படுத்துகின்றன. கீழே குறிப்பிட்டுள்ள அப்பொருட்களை விலக்கி வைத்திருப்பது நல்லது.

வெங்காயம், பூண்டு, திராட்சை, போதை பொருள், பருப்பு வகைகள், இனிப்புள்ள பொருட்கள், கடல் உணவு, லில்லி செடிகள்.

இலவசமும், இலவச மடிக் கணினியும்

மாணவ-மாணவிகளுக்கு மடிக் கணினி வருகிறது. ஆம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் இலவசக் கணினி வழங்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் இலவசக் கணினி வழங்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் (ஒப்பந்தப் புள்ளி) அறிவிப்பை எல்காட் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.


அதில் எச்.சி.எல்., விப்ரோ, எச்.வி. சோனி, லெனோவா, டெல், ஏசர், ஜெனித், சாம்சங், எல்.ஜி., இன்டெல் போன்ற 85-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. சில விதிமுறைகளின் கீழ் அனைத்து நிருவனங்களும் பங்கேற்றன.

அனைத்து நிருவனங்களும் வைப்புத் தொகையாக தலா 20 லட்சம் கட்டியிருக்க வேண்டும், மடிக் கணினியில் தமிழ், ஆங்கிலம் (மென்பொருள்) சாப்ட்வேர் இடம் பெற்றிருக்க வேண்டும். பேட்டரியுடன் (மின்கலம்) சேர்த்து கணினி எடை 2 கிலோ 700 கிராம் அளவிற்குள் இருக்கவேண்டும். பழுது ஏற்பட்டால் சர்வீஸ் செய்ய தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் (பணியகம்) வைத்திருக்க வேண்டும். மடிக் கணினிக்கு 3 வருட உத்தரவாதம், பேட்டரிக்கு 1 வருட உத்தரவாதமும் தரவேண்டும், லேப்-டாப்புக்கு வழங்கும் பேட்டரி 6 எண்ணிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். கேமரா (புகைப்படக்கருவி), பவர் கேபிள் (மின் கம்பிவடம்), சார்ஜர் (மின்னேற்றி) ஆகியவையும் தரமானதாக வழங்க வேண்டும், 2 ஜி.பி. ரேம், 320 ஜி.பி. ஹார்டு டிஸ்க் இடம் பெற வேண்டும், வின்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறை அதில் இருக்க வேண்டும். கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள், டேட்டோ பேஸ் புரோகிராம் உள்பட பல வசதிகளும் அதில் இருக்கவேண்டும், கணினி மீது 'தமிழக அரசின் மடிக்கணினி திட்டம்-2011' என்று குறிப்பிட வேண்டும், என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தரமான கணினியை அரசு வழங்கும் என தெறிகிறது.

இந்த தரமனான கணினி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொழில்நுட்பத்தையும், கணினி பற்றிய விழிப்புணர்வையும் எல்லோருக்கும் ஏற்படுத்தும் என்று மகிழ்ச்சி அடைந்தாலும். இதில் ஒழிந்திருக்கும் அபாயத்தினை அரசு சிந்தித்து பார்த்திருக்குமா?

இன்றைய சூழலில் நம்மைச் சுற்றி இருக்கின்ற விஷயங்கள் அனைத்திலும் கெட்ட விஷயங்களை அதிகமாக பார்க்கிறோம். உதாரணமாக, திரைப்படங்களை எடுத்துக்கொள்வோம். அதில் காட்டப்படும் வன்முறை, ஆபாசம், காதலை பற்றிய தவறான பார்வை இவை அனைத்தும் பெரியவர்களை விட சிறியவர்களையும், பள்ளி மாணவ-மாணவிகளையுமே அதிகமாக பாதிக்கிறது.

கைபேசியின் மதிப்பு இறங்கி போனதால் தான் இன்று பள்ளி மாணவர்கள் கூட அதனை உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்கும் நோக்கில் அதை வாங்கி கொடுத்தாலும், அதன் மூலம் குறுந்தகவல், கண்டதை புகைப்படம் எடுத்தல், ஆபாச  படங்கள் போன்றவை பறிமாற வசதியாகி விட்டது. இந்த வசதிகள் அனைத்தும் நல்ல வழியில் பயன்பட்டால் தப்பில்லை.

கைப்பேசியிலேயே இவ்வளவு பாதிப்பு உள்ளதென்றால், கணினியில் எவ்வளவு இருக்கும், அதுவும் நாம் அறிந்த ஒன்றே. இணையதளம் அதில் உள்ள நல்லவை கெட்டவை அதற்கு ஒரு நல்ல சான்று. கணினியை கூட நம் கண்காணிப்பில் வைத்து விடலாம், ஆனால் மடிக் கணினி அப்படி அல்ல. அதை எங்கு வைத்து என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் ஆராய்ந்து கொண்டே இருக்க முடியாது.

மடிக் கணினியும் இலவசமாக வருகிறது, அதன் மதிப்பும் இறங்கிவிடும். இதன் விழைவும் அதிகமாக இருக்கும். அரசு இதனை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் இருந்து மடிக் கணினியை வழங்கலாம். கல்லூரி மாணவர்கள் அனைத்து பிரிவினருக்கும் கூட இது உபயோகமானதாக இருக்கப் போவதில்லை, இருந்தும் அதை கூட பொருத்துக்கொண்டு சரி எனலாம்.

ஆனால் பக்குவமற்ற வயதுடைய பள்ளி மாணவ-மாணவியர்கள் இதனால் பாதிப்படைவது உறுதி. இதை இனி மாற்றி அமைக்கவோ, தடை செய்யவோ முடியாவிட்டாலும், பெற்றோர்கள் பள்ளி மாணாக்கர்களை தம் கவனத்திற்குள் வைத்துக் கொண்டே இருப்பது நல்லது.

இலவசம்! - இது நம்மை எவ்வளவு கவர்ந்த ஒன்று.

இன்று நம் நாட்டில் இலவசம் என்பது சாதாரன விஷயமாகி விட்டது. கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் ஒன்றே அதிகமாக இருந்தது. இலவசமாக பொருட்களை வழங்குவது கடந்த ஆட்சியிலிருந்தே நடந்து வருகிறது. இது இயலாதவர்களுக்கு நல்ல திட்டமாக கருதினாலும், முடிந்தவர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும், இவை மனிதனின் தன்மானத்தை சீண்டும் விஷயமே. இது சில தரப்பினரிடம் சோம்பேரித் தனத்தை வளர்த்து விடாதா?

எல்லோருக்கும் இல்லாதவர்களுக்கும் இலவசமாக சமமாக பொருட்கள் கிடைக்கிறது. இது சந்தோசத்திற்க்கும் பாராட்டுதலுக்கும் உரிய விஷயமே. இருந்தாலும் அதன் பயன்கள் சரியாகவும், சரியான இடத்திற்கு தகுந்தாற் போலவும் போய் சேர வேண்டும், இல்லையேல் விழைவுகள் சரியானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.

இதுபோக மிக்சி (மின்னம்மி), கிரைண்டர் (மின்னறவை), மின்விசிறி, கறவை மாடு போன்றவைகளும் இலவசமாக தருகிறது நம் அரசு. அண்மையில் கோவை நகர கிரைண்டர் தயாரிப்பாளர்களை புறக்கணித்து விட்டு வேறு எங்கோ கிரைண்டர் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் அறிந்த தயாரிப்பாளர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 700 க்கும் மேற்பட்ட கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. இதனால் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்விசிறி, மிக்ஸி போன்றவை தமிழகத்தில் பெருமளவு தயாரிக்கப்படாத காரணத்தினால், பிற மாநிலத்திருந்து அல்லது இறக்குமதி செய்வதில் எந்த தவறுமில்லை. ஆனால் டெண்டருக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலையில், பொருட்களை தர நினைத்து இப்படி தரம் குறைந்த சீன தயாரிப்புகளை இறக்குமதி செய்வது மட்டுமில்லாமல், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிழைப்பை கெடுக்க வேண்டாமே. கிரைண்டருக்கு பெயர் பெற்ற நகரத்தை வைத்து கொண்டு தமிழக அரசு, சீன தயாரிப்புகளை நாட நினைப்பது தவறு.

இலவசத்திற்காக இவ்வளவு விஷயங்களை பொருக்க வேண்டுமா? அரசு எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்குமா?

நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா???


தண்ணீர் நமக்கு எவ்வளவு தேவை, அதன் முக்கியத்துவம், அனைத்தும் தெரியும். இருந்தும் நிறைய கேள்விகள் நமக்கு தோன்றின. தண்ணீர் எப்போது ஆபத்தானவை? நாம் தினமும் பருகும் தண்ணீர் சுத்தமாக சுகாதாரமாக உள்ளதா? இதில் நாம் எந்த அளவு அக்கறை கொண்டுள்ளோம்?  குழாய் தண்ணீரை விட போத்தல்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் சுத்தமானதா? வீட்டில் தண்ணீரை எப்படி பாதுகாப்பானதாக மாற்றுவோம்? இதற்கெல்லாம் பதில் நம்மிடம் உள்ளதா???

நமக்கு கிடைக்கின்ற தண்ணீர் ஆழ்துளைக் கிணறு (Borewell), மாநகாரட்சி வழியாக வழங்கப்படுவது, அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water), கனிம நீர் (Mineral Water), கிணறு, குளம், மழை ஆகிய வழிகளில் இருந்தே வருகிறது.இந்த வகைகளில் வரும் தண்ணீரை மக்கள் தங்கள் வசதி மற்றும் தகு நிலைக்கு தகுந்தாற்போல் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.

இதில் நாம் பருகும் தண்ணீர் எவ்வளவு சுத்தமாக உள்ளது என நாம் அறிய வேண்டும். ஆழ்துளைக் கிணறு வழியாக வரும் தண்ணீர் கண்டிப்பாக பாதுகாப்பற்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை நேரடியாக பருகுவது எப்போது வேண்டுமானாலும் ஆபத்தாக அமையும். அடுத்து குளோரின் (பாசிகை) கலக்கப்பட்ட தண்ணீர், தண்ணீரில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கதான் குளோரின் கலக்கப்படுகிறது. ஒரு புறம் இது நன்மைக்காக என்றாலும், இதனாலும் பக்க விழைவுகள் உள்ளன. ஸ்பானிய நாட்டைச் சார்ந்த சீஆர்இஏஎல் எனும் ஆராய்ச்சி மையம் அண்மையில் நடத்திய ஆய்வில், அளவுக்கு அதிகமாக குளோரின் கலந்த தண்ணீரை பருகுவதோ, அதில் குளிப்பதோ சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் அதிகமாகின்றன அறிவித்துள்ளது.குளோரின் கலந்த நீரை அதிகமாக பருகியவர்களிடம் புற்றுநோய்கான அறிகுறிகள் தெரிவதாக பல மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். குளோரின் நுண்ணுயிர்காளை அழிக்க உதவினாலும், மிகவும் ஆபத்தான கோலிஃபோர்ம் எனும் கிருமி அதில் அழியாமல் இருப்பதாக கூட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளோரின் கலந்த நீரில் வளர்ப்பு மீன்கள் இறந்து விடுகின்றன, இது சிந்திக்க வேண்டிய ஒன்றே.

போத்தல் தண்ணீர் இரண்டு வகைகளில் நமக்கு கிடைக்கின்றது, ஒன்று அடைக்கப்பட்ட குடிநீர் மற்றொன்று கனிம நீர். இதில் அடைக்கப்பட்ட நீர் என்பது சுத்திகரிக்கபட்ட நீர். நீரை தூய்மை செய்ய பல வழிகள் உள்ளன, அதைனை பயன்படுத்தி அருந்துவதற்கு ஏற்ற நீராக மாற்றப்படுகிறது. கனிம நீர் என்பது கனிமங்கள் (Minerals) நிறைந்த நீராகும். இயற்கயாகவே கனிமங்கள் சேர்ந்திருக்கும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கூடுதல் பலன்களை நீங்கள் இதன் மூலம் பெறலாம். செயற்கயாக கனிமங்கள் சேர்க்கப்படும் நீரும் விற்கப்படுகிறது. இந்த இரண்டு வகை நீரும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இது போக குளம், கிணறு ஆகியவற்றில் இருக்கும் நீர் சுத்தமானதாக இருக்கும் என்பது அதனை பாராமறிப்பதை பொறுத்து இருக்கிறது, இருந்தாலும் நம்பகத்தன்மை என்பது குறைவே.

நமக்கு சுத்தமான தண்ணீர் தேவை, இப்போது இருக்கும் சற்றுப்புறத் தூய்மைக் கேடுகளில் தண்ணீர் எவ்வளவு தூய்மையாக கிடைக்கிறது என்பது சந்தேகமே. எனவே வீட்டில் நாம் சுத்திகரீக்கப்பட்ட தண்ணீரை அருந்தவும், பயன்படுத்தவும் வேண்டும். எல்லோரும் பணம் செலவு செய்து சுத்தமான நீரை வாங்க முடியாது, வசதிக்கு ஏற்றார் போல் இதனை நடைமுறைப்படுத்தலாம்.

நாம் தண்ணீரை சுத்தப்படுத்த வீட்டில் மாசுநீக்கி - Purifierகளை பயன்படுத்தலாம். இவை வசதிக்கு ஏற்றார் போன்ற விலைகளில் கிடைக்கிறது, நிறைய ரகங்களும் இருக்கிறது. தொழில்நுட்பம் பல நிறைந்த சுத்திகரிப்பு முறையும் இதில் உள்ளன. Reverse Osmosis - எதிர்மறை சவ்வூடுபரவல், Ultrafiltration - நுண் வடித்தல், Ultraviolet - புற ஊதா போன்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுத்தமான குடிநீர் நமக்கு கிடைக்கின்றது.

இதுவும் நடைமுறைப் படுத்த முடியாதவர்கள், குறைந்தபட்சமாக நன்கு கொதிக்க வைத்த நீரை பருகலாம். கொதிக்க வைக்கும் வெப்ப அளவு நூறாக இருந்தால் மிக நன்று.

மற்றவர்களுக்கும் இதனை வலியுறுத்துவோம்.

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினச் சிறப்பு கட்டுரை

"உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன்."

"நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்."

"ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் பார்த்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர்."

"உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் அனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது."

"பனைமரம்: தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.
தென்னைமரம்: தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது.
அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.
வாழைமரம்: தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும்
. - கண்ணதாசன்"




இப்படி நண்பர்களை பற்றி கூறியவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.

நட்பு என்பது ஒரு மந்திர உறவு, முழுமையான மகிழ்ச்சி மற்றும் கேளிக்கைகள் கொண்டது. ஜாய்ஸ் ஹால் என்பவர் 1919 ஆம் ஆண்டு இதனாய் நடைமுறைபடுத்தினார். அன்று முதல் இது கொண்டாடடப்ட்டு வருகிறது. வயதானாலும் நட்புக்கு என்றும் வயது இல்லை. அன்று உயிருக்கு உயிராக நண்பர்களாக பழகி வருபவர்கள் கூட தங்கள் நட்பை பலப்படுத்திக்கொள்ள, தங்கள் அன்பை வெளிப்படுத்த நண்பர்கள் கையில் நட்பு கயிற்றை கட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள். குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆண்-பெண், ஏழை-பணக்காரர் போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு.கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் பொய், கொஞ்சம் சண்டை ஆனால் நிறைய சந்தோஷம் நிறைய நிறைய அன்பு, பகிர்வு, அக்கறை இதுவே நட்பு.

நண்பர்கள் இல்லாதவர் என யாருமில்லை.சந்திக்க முடியாவிட்டாலும், வாழ்த்து அட்டை, இ-மெயில், ஏன் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதன் மூலம் கூட அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது வரவேற்கத்தக்கது. பழைய நண்பர்களை நினைவுபடுத்தும் தினமாகவும் நண்பர்கள் தினம் இருக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை, நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது.





நண்பர்களிடையே வரக்கூடாத விஷயம் "முறிவு'. தவிர்க்க முடியாத காரணங்களினால் முறிந்து விட்ட நட்புக்கு வைத்தியம் பார்க்கும் நாளாகவும் இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதால் எந்த இழிவும் இல்லை என்பதை உணர வேண்டும்.

எல்லோருக்கும் வலையுலக நட்புக்களுக்கும் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்து உரித்தாகட்டும்.

(இந்த கட்டுரை எனது நண்பர்களுக்கும் நண்பர்கள் தினம் கொண்டாடும் அனைவருக்கும் சமர்ப்பணம். எல்லோரும் தங்களது நண்பர்களுக்கு இத்தனை பகிர்ந்து கொள்ளவும்.)

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content