'மங்காத்தா' தல அஜித்தின் 50வது படம், இந்த வருடத்தில் அதிக எதிர்பார்பினை ஏற்படுத்திய படங்களில் முக்கியமான ஒன்று. அவருடன் அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, வைபவ், அஞ்சலி, லட்சுமி ராய், ஆன்ட்ரியா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இதனை தயாரித்திருப்பது தயாநிதி அழகிரியின் கிளவுட் நயன் மூவீஸ் நிறுவனமாகும். யுவன் ஷங்கர் ராஜா இதற்கு இசை அமைத்துள்ளார்.
ஐ.பி.எல் நடைபெறும்பொழுது நடக்கும் சூதாட்டத்தினை மையமாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. முதலில் அர்ஜுனிற்கு பதிலாக நாகர்ஜுனா நடிப்பதாக அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளிவந்தன, நாகர்ஜுனாவும் தெலுங்கில் ரீமேக் செய்து அஜித்தின் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால் தேதிகள் மற்றும் வேறு காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார். சமந்தா, அனுஷ்கா, நீது சந்திரா ஆகிய நடிகைகளும் கதாநாயகிகளுக்காக ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டனர். கடைசியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அஜித்துடன் இவருக்கு இது மூன்றாவது படமாகும்.
ஆகஸ்து 2, 2010 ஆம் ஆண்டு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் படம் தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது, சில காரணங்களால் தடைபெற்று அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. பின்பு அறிமுக பாடலான 'விளையாடு மங்காத்தா' பேங்காக், தாய்லாந்து நாடுகளில் படமாக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு , சென்னையில் நடைபெற்றது, பெரம்பூரில் உள்ள பின்னி மில்லிலும், மும்பை தாராவியின் அமைப்பு கொண்ட செட்கள் ஸ்டுடியோவில் அமைத்து தொடர்ந்து நடந்தது. அடுத்ததாக 'வாடா பின் லேடா' பாடல் 5 நாட்கள் படமாக்கப்பட்டது. 'மச்சி ஓபன் தி பாட்டில்' பாடலுக்காக மும்பை நடிகையான கைனத் அரோரா வரவழைக்கப்பட்டார், இப்பாடலில் அஜித், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் நடனமாடினர். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் மும்பையில் நடைபெற்றது, தொடர்ந்து சென்னையிலும், படத்தின் இறுதிக் காட்சிகள் மதுரையிலும், சில காட்சிகள் ஹைதராபத்திலும் நடைபெற்றது. ஜூன் மாதத்தில் அஜித் தனது பகுதிகளை நடித்து முடித்தார், பின்பு பேங்காக்கில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. ஜுன் மாதமே படப்ப்டிப்பு முடிந்ததாக அறிவித்தனர். பின்பு கடந்த ஜூலை மாதம், அஜித் படத்தின் சில காட்சிகளில் புதிய தோற்றத்தில் வருவது போன்ற படப்பிடிப்பு ஒரு நாள் நடைபெற்றது.

படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக 30 கிலோ எடையுள்ள கேமராவை உடலில் பொருத்திக்கொண்டு நடித்துள்ளார். மேலும் ஒப்பனை (make up) இல்லாமல் வெள்ளை முடியுடன் (salt & pepper style) அசல் தோற்றத்துடன் நடித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், இது இவருக்கு அஜித்துடன் இணையும் நான்காவது படமாகும். முதலில் மே 20 ஆம் தேதி ஒரு பாடலினை (விளையாடு மங்காத்தா) வெளியிட்டனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை இது பெற்றது. அடுத்து ஆகஸ்து 10 ஆம் தேதி அனைத்து பாடல்களும் வெளிவந்தது. மொத்தமாக 8 பாடல்கள் படத்தில் இடம்பெறுகின்றன.
பாடல்கள்:

1. விளையாடு மங்காத்தா - யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், ரஞ்சித், சுசாரிதா, அனிதா - 6:02
2. நீ நான் -எஸ்.பி.பி.சரண், பவதாரணி - 4:07
3. வாடா பின் லேடா - கிரிஷ், சுசித்ரா - 4:29
4. மச்சி ஓபன் தி பாட்டில் -மனோ, ஹரிசரண், பிரேம்ஜி அமரன், நவீன், திப்பு - 4:46
5. நண்பனே -மதுஸ்ரீ, யுவன் ஷங்கர் ராஜா - 5:02
6. பல்லேலக்கா -கார்த்திக், விஜய் யேசுதாஸ், அனுஷா தயாநிதி - 5:15
7. விளையாடு மங்காத்தா மிக்ஸ் - யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், ரஞ்சித், சுசாரிதா, அனிதா - 6:05
8. தீம் - இண்ஸ்ட்ருமென்டல் - 3:04
சோனி நிறுவனம் பாடல் உரிமையை ரூ. 1 கோடிக்கு வாங்கியுள்ளது. பாடல் வெளியீடு ரேடியோ மிர்ச்சியில் மிக எளிமையாக நடந்தது.
படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாது அனைவருக்கும் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களும் வெற்றி பெற்றுள்ளன. ஆகஸ்து 30 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment