இயக்குனர்: ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்பாளர்: உதயநிதி ஸ்டாலின்
கதை: ஏ. ஆர். முருகதாஸ்
நடிப்பு:
சூர்யா
சுருதி ஹாசன்
ஜானி ட்ரை ஙுயென்
இசை: ஹாரிஸ் ஜயராஜ்
ஒளிப்பதிவு: ரவி கே. சந்திரன்
இணையதளங்களில் ஏழாம் அறிவு படத்திற்கு ஆஹா ஓஹோ எனப் பாராட்டுகள் ஒரு பக்கம் குவிந்தாலும், இன்னொரு பக்கம் மொக்கை, சுமார் என்றும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. எதில் உண்மை என்பதே குழப்பமாக உள்ளது. படத்தை பார்த்த பிறகு தான் தெரிகிறது ஏன் இந்த முரண்பாடான கருத்துக்கள் என்று.
படத்தில் பணியாற்றியிருப்பவர்களை பற்றி பெரிதாக விவரிக்க தேவையில்லை, படத்தின் கதையைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுறத்தில் வாழ்ந்த போதி தர்மர் சீனாவிற்கு போகிறார். அங்கு அவர் சீனர்களுக்கு மருந்து மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பம் வருகிறது. பின்பு அங்கு அவர்களின் விருப்பப்படி அங்கேயே இறக்கிறார். அடுத்து தற்போதைய காலகட்டத்தில் சுருதி ஹாசன் போதி தர்மர் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறார், அதில் போதி தர்மர் வம்சாவழியான சூர்யாவை சுற்றி வந்து ஆராய்ச்சிக்கு பயண்படுத்த நினைக்கிறார், இதை காதல் என நினைத்து சூர்யா ஏமாறுகிறார், இப்படி ஒரு சின்ன தனிக் காதல் கதையும் உள்ளது.
ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு போதி தர்மரால் குணப்படுத்தப்பட்ட நோயை மீண்டும் சீனா ஜானி ட்ரை ஙுயென் மூலம் இந்தியாவில் பரப்புகிறது, இதுவே ஆப்பரேசன் ரெட். அதோடு நில்லாமல் சூர்யா, சுருதி ஹாசன் இருவரையும் கொல்வதும் அவர் வேலை. நோய் பரவினால் சீனா மட்டுமே மருந்து கொடுக்கமுடியும், மீண்டும் போதிதர்மனின் வம்சாவழி வரக்கூடாது என்பதே சீனாவின் நோக்கம். சுருதி ஹாசன் இதையெல்லாம் தடுக்க போதி தர்மரின் திறமைகளை சூர்யாவிற்கும் தூண்டிவிடுகிறார். அதன் பின் ஜானியோடு சண்டையிட்டு இந்தியாவை மீட்கிறார் சூர்யா. அவ்வளோதான் கதை.
படத்தின் மிகப்பெரிய பலமே போதிதர்மன்தான். அதிகமாக யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொன்னதற்காக முருகதாஸுக்கு தனிப் பாராட்டுக்கள். இதை தமிழர்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் தமிழர்களை தவிற மற்றவர்களுக்கு எவ்வளவு ஈர்க்கும் என்று தெரியவில்லை. அடுத்த பலம் சூர்யா, சுருதி ஹாசன், ஜானி மூவரும்தான். சூர்யாவின் உழைப்பு நன்கு தெரிகிறது படத்திற்காக மெனக்கெட்டிருகிறார், சுருதிக்கும் நல்ல வாய்ப்பு நன்றாகவே செய்துள்ளார். தனியாக கவனிக்க வேண்டியவர் ஜானி, அழகான வில்லன், சண்டைகள் பிரமாதமாக செய்கிறார் ஆனால் அவர் கண்களை பயன்படுத்தியே அவரை சிறிது வீணடித்தது போலவே தோன்றுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை பாடல்களில் அருமையாக இருக்கிறது. படம் முழுவதும் பக்க பலமாக இருப்பது ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவு, அருமை. பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகள் அருமை, (ஆனால் சில இடங்களில் கொஞ்சம் ஒவர்).
இத்தனை பலத்தினையும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் ஒட்டை வைத்துள்ளார் முருகதாஸ். படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் இல்லாத காட்சிகள், போதிதர்மன் ஏன் சீனாவிற்கு போனார், ஏன் அவர் இங்கு யாருக்கும் அந்த கலையை கற்றுக்கொடுக்காமல் சென்றார் அவரை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நிறைய ஏன் குறிப்பிடவில்லை. அவரி ஷாவோலின் மாஸ்டராகவே காட்ட முற்பட்டுள்ளார். சர்க்கஸ் சூர்யாவிற்கு அங்கு அதிகமான வேலை இல்லை. ஜானி போலிசார்களை கொன்று குவிக்கிறார் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவே இல்லையா? தமிழக போலீசை பெரிதாக காட்டும் தமிழ் சினிமாவே அவர்களை சாதாரணமாக காட்டியுள்ளது, ஒரு வேளை சிங்கம் சூர்யாவே போலீசாக வந்திருந்தால், ஜானி நாய்க்கு ஊசி போடும்போதே 'ஓங்கி அடிச்சா ஒன்ர டன் வெயிட்டுடா'னு வசனம் பேசியே கொன்றுப்பார். படத்தில் சூர்யா, சுருதி ஹாசன், ஜானி மூவரை சுற்றி கதை நகர்வதால் மற்ற விஷயங்களை சாதாரணமாக்கி லாஜிக் இல்லாத காட்சிகளை திணித்திருக்கிறார், இதுவே படத்தின் பெரிய பலவீனம்.
படத்திற்கு கொடுத்த 'BUILD-UP' கொஞ்சம் ஒவர் தான், போதிதர்மனை காட்டிய முருகதாஸ் அவரை வைத்தே வியாபாரம் செய்திருக்கிறார், படத்தின் முதல் 20 நிமிடங்கள் அவர்களின் உழைப்பு தெரிகிறது, ஆனால் போதிதர்மனை வெறும் வித்தைக்காரனாக மட்டும் காட்டியதை தவிர்த்து அவரின் வாழ்க்கையை விவரித்திருக்கலாம். படம் ஆரம்பத்தில் இருக்கும் சுவாரஸ்யம் போக போக குறைகிறது. கதை எங்கு போகிறது என்பதை எல்லோராலும் கணிக்க முடிகிறது, கணிக்க முடிகிற காட்சி அமைப்புக்கு எதற்கு இரண்டே முக்கால் ம்ணி நேரம். சஸ்பென்ஸ் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும். கொடுத்த பில்டப்புகளை தவிர்த்துவிட்டு படம் பார்த்தால் படம் ஒகே. எதிர்பார்ப்புகளோடு போனால் சிறிது ஏமாற்றமே. ரசிகர்கள் எதை எடுத்துக்கொள்கிறார்களோ அதுவே விமர்சனம் படத்தில் பாராட்டும் விஷயங்களும் மொக்கையான விஷயங்களும் சரி பாதியாக உள்ளன. BUILD-UP மட்டுமே படத்தின் மொக்கை விமர்சனங்களுக்கு முக்கிய காரணம். BUILD-UP தவிர்த்திருக்கலாம்.
1 comments:
ஈழத்தமிழர்களின் போராட்டம் வீழ்ந்ததற்கு சூர்யா சொல்லும் காரணம் நம் மனதை தைப்பதாக உள்ளது. படத்தை அவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இயக்குனர் சொல்வதிலும் நம்மை கவர்கிறார்.
Post a Comment