1984 டிசம்பர் 2 நள்ளிரவு 12.00 மணி. மத்திய பிரதேச மாநிலம். போபால் நகரம். எல்லாப் பொழுதுகளையும் போலவே அன்றைய பொழுதும் கழியும் என்று வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தனர் மக்கள். அன்றைய பொழுதின் வேலைகளை முடித்த திருப்தியோடு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். விளையாடி முடித்த களைப்பில் பெற்றோரின் அரவணைப்பில் இனிமையான கனவுகளோடு குழந்தைகள் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். தொலைக்காட்சி பரவியிருக்காத நேரம், ஊரே நிசப்தமாக தூங்கிக் கொண்டிருந்தது. சில இடங்களில் மட்டும், டிரான்சிஸ்டரில் கிஷோர் குமாரும், லதா மங்கேஷ்கரும் காலங்களைக் கடந்த தங்கள் இனிய குரல்களில் இரவின் அமைதியை தாலாட்டிக் கொண்டிருந்தனர்.
போபால் மாநகரின் ஜெயபிரகாஷ் நகரில் ஹசீரா பீவி தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாரோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அந்த அமைதியை சட்டென்று குலைத்துப் போடும் வகையில், திடீரென்று அவரது கணவர் கடுமையாக இருமத் தொடங்கினார். "யாரோ மிளகாயை எரிக்கிறாங்க போல இருக்கு" என்றார். ஹசீரா பீவிக்கும் இருமல் கடுமையாக வந்தது. மிளகாயை எரிப்பதால் இப்படி மூச்சை முட்டும் புகை வராது. வெளியே பரபரவென்று ஏதோ பெரும் இரைச்சல் கேட்டது. மக்கள் ஓலமிட்டுக் கொண்டு ஓடியது போலிருந்தது. அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஹசீராவுக்கு தனது 11 மாத பச்சிளங் குழந்தையின் மீதே எல்லா கவனமும் சென்றது. ஏதோ பெரிய ஆபத்து என்று உணர்ந்து கொண்ட அவர், ஒரு போர்வையில் குழந்தையைச் சுற்றி கையில் எடுத்துக் கொள்ள, அவரது கணவர் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொள்ள, தனது மாமியாரோடு வீட்டை விட்டு வெளியில் வந்தார் ஹசீரா.
தெருவெங்கும் மக்கள் அலறிக் கொண்டு பல்வேறு திசைகளில் ஓடிக் கொண்டிருந்தனர். எங்கும் ஒரே குழப்பம். அலறல். கூச்சல். கூட்டத்தோடு ஓடிய ஹசீரா மக்களோடு மக்களாக அருகில் இருந்த ஒரு கல்லூரிக்குள் அடைக்கலம் புகுந்தார். அங்கு சென்ற பிறகுதான் அவசரத்தில் தனது 4 வயது மகனை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. தலைதெறிக்க மீண்டும் வீட்டுக்கு ஒடினார். இறந்து விட்டான் என்று நினைத்து தனது மகனை பிணங்களோடு வண்டியில் கிடத்தி வைத்திருந்ததை கண்டார்.
இது ஹசீராவின் கதை மட்டுமல்ல...போபால் நகரில் அன்று இரவு வாழ்ந்த அனைவருக்கும் இப்படித்தான் நேர்ந்தது. என்ன நடந்தது என்று உணர்வதற்குள்ளாக அன்று இரவே 4000 மக்கள் ஈக்களைப் போல் செத்து விழுந்தனர். யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த ஜெயப்பிரகாஷ் நகர், காஜி கேம்ப், சோளா கஞ்ச் மற்றும் ரயில்வே காலனி பகுதியில் வசித்த அனைவரும் கடும் பாதிப்புக்குள்ளாயினர். மூன்று நாட்களுக்குள் 8000 பேர் செத்து மடிந்தனர். அடுத்த சில ஆண்டுகளுக்குள் 15000க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மொத்தத்தில் இந்த விஷ வாயு பேரழிவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.
இவ்வளவுக்கும் காரணமாக இருந்த பூச்சி மருந்து தயாரிக்கும் யூனியன் கார்பைட் ஆலை 1969ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் போபால் மாநகரத்தில் உருவாக்கப்பட்டது. மோசமான பூச்சிக்கொல்லியாக உருவெடுத்திருந்த, சர்ச்சைக்குரிய டி.டி.ட்டி எனப்படும் டைக்ளோரோபினைல் ட்ரைக்ளோரோ ஈதேன் என்ற வேதிப்பொருளுக்கு மாற்றாக "செவின்" என்ற பூச்சிக்கொல்லியை தயாரிப்பதற்காக அது நிறுவப்பட்டிருந்தது. அந்தப் பூச்சிக் கொல்லி தயாரிக்க தேவையான முக்கிய வேதிப்பொருள் "மீதைல் ஐசோ சயனேட்" என்ற கொடிய விஷம்.
தொழிற்சாலையின் மூன்று தொட்டிகளில் 60 டன் மீதைல் ஐசோ சயனேட் அப்போது இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஒரு தொட்டியில் மட்டும், பாதுகாப்பு அளவைவிட மிக அதிகமாக 40 டன் வாயு சேமிக்கப்பட்டிருந்தது. மீதைல் ஐசோ சயனேட்டின் கொதி நிலை 31.1 டிகிரி. அறை வெப்பநிலையிலேயே காற்றில் பரவும் தன்மை கொண்டது. இந்த வேதிப்பொருள் மணம் இல்லாத தன்மை கொண்டதால், காற்றில் பரவினாலும் உடனடியாக தெரிய வாய்ப்பில்லை. கண் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலால் மட்டுமே அறிய முடியும்.
அந்த வேதிப்பொருள் குளிர் நிலை தொட்டியில் வைக்கப்பட வேண்டும். 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப்பட வேண்டும். ஆனால் சம்பவம் நடந்தபோது தொட்டி வெப்பநிலை 20 டிகிரியாக வைக்கப்பட்டிருந்தது. 1984 டிசம்பர் 2 அன்று இரவு தொழிலாளர்கள் குழாய்களை சுத்தம் செய்து முடிக்கும் தருவாயில் 610 எண் கொண்ட தொட்டியில் ஏராளமாக தண்ணீர் புகுந்தது. மீதைல் ஐசோ சயனேட் உடன் தண்ணீர் கலந்தவுடன், அது சேமிக்கப்பட்டிருந்த இரும்புத் தொட்டி கிரியாஊக்கியாக செயல்பட, வேதி மாற்றம் நடைபெற்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய விஷவாயுவாக மாறி அது காற்றில் பரவ ஆரம்பித்தது.
காற்றும் வீச, அருகிலிருந்த மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் இவ்விஷ வாயு புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை மீளாத் துயிலில் ஆழ்த்தியது. இக்காற்று பரவத் தொடங்கியதும் சுவாசித்த மக்கள் கண் எரிச்சலும், நுரையீரல் எரிச்சலும் அடைந்து சுருண்டு விழுந்தனர். இதில் இருந்து தப்பிக்க வேகமாக ஒடியவர்கள், இவ்விஷக் காற்றை வேகமாக சுவாசித்து, அதிவேகமாக மாண்டனர்.
1985ல் மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விஷ வாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக கருச்சிதைவு ஏற்பட்டது, 21 குழந்தைகள் குறையுடன் பிறந்தன, 27 குழந்தைகள் இறந்து பிறந்தன என்று தெரிவித்தார். இச்சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு பெண்களிடம் ஆய்வு நடத்தியதில் 90 சதவிகித பெண்கள் கருப்பை சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகியுள்ளதும், 79 சதவிகித பெண்களுக்கு இடுப்பு எலும்பு வீக்கமடைந்த நோயும், 75 சதவிகித பெண்களுக்கு கழுத்து எலும்பு தொடர்பான நோய்களும், 35 சதவிகித பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அதிகப்படியான ரத்தப்போக்கும், 59 சதவிகித பெண்களுக்கு பல்வேறு நோய்களும் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய அனைவரையுமே மூச்சுத் திணறல், சுவாச நோய்கள் பாதித்திருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
போபால் விஷ வாயு பேரழிவு நடந்து 25 ஆண்டுகள் கழித்து, அந்தச் சம்பவம் சுற்றுச்சூழலுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம் (சி.எஸ்.இ.) ஓர் ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக, யூனியன் கார்பைட் தொழிற்சாலை, அங்கிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீர், மண் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட 561 மடங்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நச்சு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொழிற்சாலை, அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக மாசுப்பட்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த கொடிய நச்சுகள், உடலில் நரம்பு பிரச்சினைகள், புற்றுநோய், ஈரல், எலும்பு, ரத்த அணுக்கள் உட்பட அம்சங்களை பாதித்து நோய்களை உருவாக்கும் தன்மை படைத்தவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பேரழிவு நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் இந்திய அரசு சார்பில் எந்த ஆய்வும் தொடர்ச்சியாக நடக்கவில்லை. 1994ல் இந்திய மருத்துவ ஆராய்சிக் கழகம் ஓர் ஆய்வை அரைகுறையாக கைவிட்டுள்ளது. இந்தப் பேரழிவுக்கு பெரிய பின்னணி இருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
செவின் பூச்சிக் கொல்லிக்கு சந்தையில் வரவேற்பு குறையத் தொடங்கியதால் 1984 டிசம்பர் முதல் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை மூடி விடலாம் என்று அந்நிறுவனம் ஆலோசித்து வந்தது. இந்த அம்சம் மிக முக்கியமானது. மூடப்பட உத்தேசித்திருந்த ஓர் ஆலையில் இருந்து விஷவாயு கசிவு நடந்திருக்கிறது. எப்படியோ இந்த ஆலையை மூடப் போகிறோம். இந்த விஷவாயு மக்களிடையே என்ன பாதிப்புகளை நிகழ்த்தும் என்று பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று அமெரிக்க முதலாளிகளுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் என்ன எதிர்மருந்து கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள விஷவாயுவின் பெயரை ஆலை நிர்வாகத்திடம் மருத்துவர்கள் கேட்டபோது, உடனடியாகச் சொல்ல மறுத்திருக்கிறார்கள். யூனியன் கார்பைடின் இந்தியத் தலைவர் ஆண்டர்சன் இன்று வரை கைது செய்யப்படாமல், சௌகரியமாக வாழ்ந்து வருகிறார். யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள டவ் நிறுவனம்தான் இப்பொழுதும் எவரெடி பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது.
இப்படி அன்று ஒரு நாள் நடந்த விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட பாதிப்பு, போபால் நகர மக்களை 25 ஆண்டுகளைக் கடந்தும் வதைத்துக் கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரையும், சுற்றுச் சூழலையும் சீரமைக்க முடியாத அளவுக்கு கடுமையாக மாசுபடுத்தியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் இன்றுவரை முழுமையாக கிடைக்கவில்லை. கால் நூற்றாண்டு கழிந்த பின்னரும், நிவாரணத் தொகைக்காக போராடும் மக்களை, அரசு அமைப்புகள் வழக்கம் போல இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிக் கொண்டுள்ளன. மக்களுக்கு முழுமையான நஷ்டஈடும் பெற்றுத் தரவில்லை, நீதியும் பெற்றுத் தரவில்லை, ஆய்வும் நடத்தவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் உயிரிழந்த மக்களுக்கு ரூ. 100 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்போவதாக மத்திய அரசு சொல்கிறது.
இந்தப் பேரழிவில் இருந்து அரசு எந்த பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்று வரை இதுபோன்ற விபத்துகளை எதிர்கொள்வது குறித்து எந்த திட்டமிடலும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் கடலூரில் உள்ள சிப்காட், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகள், ராணிப்பேட்டையில் உள்ள தோல் பதனிடும் ஆலைகள், சேலம் மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகள் மீதைல் ஐசோ சயனேட் போன்ற பல நச்சுப்பொருட்களை இன்றும் பயன்படுத்தி வருகின்றன. இங்கு அவ்வப்போது நடைபெறும் சிறுவிபத்துகளும் உரிய முறையில் கவனம் செலுத்தப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன. எத்தனை போபால்கள் நடந்தாலும், அரசு திருந்தப்போவதில்லை. பரிசோதனைக்கூட எலிகளாக நம்மை பயன்படுத்தும் இந்தப் போக்கை எப்படி தடுத்து நிறுத்துவது?
போபால் பேரழிவு - முக்கிய தகவல்கள்
நிறுவனம் - யூனியன் கார்பைடு (தற்போது டவ்) எவரெடி பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் தயாரித்த பொருள் - நாம் அன்றாடம் சாப்பிடும் தானியப் பயிர்களின் மீது தெளிக்கப்படும் செவின் பூச்சிக்கொல்லி. இதுதான் உடனடியாக 5,000 பேரைக் கொன்றது வெளியான வாயு - மீதைல் ஐசோ சயனேட். கண் எரிச்சல், நுரையீரல் அடைப்பு ஏற்படுத்தி பார்வையை பறிக்கும், இறப்பை ஏற்படுத்தும் மணமற்ற வாயு.
பேரழிவு நடந்த நாள் - டிசம்பர் 2 நள்ளிரவுக்கு மேல், 1984
இறந்தவர்கள் எண்ணிக்கை - உடனடியாக 5,000 பேர் இறந்தனர். சில மாதங்களில் 15,000 பேர் இறந்தனர். 5,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கு தண்டிக்கப்பட்டவர்கள் - யாருமில்லை. கைதுகூட செய்யப்படவில்லை. இந்தியப் பிரிவுத் தலைவர் வாரன் ஆண்டர்சன், அமெரிக்க தீவில் உல்லாசமாக இருக்கிறார்.
நஷ்ட ஈடு கேட்கப்பட்டது - ரூ. 1500 கோடி
நஷ்ட ஈடு தரப்பட்டது - ரூ. 250 கோடி
(உச்ச நீதிமன்றம் மூலம்)
நன்றி : அ.சங்கர், வலை: கீற்று.
யாரும் மறந்துவிடக்கூடாது இந்த பேரழிவை...
யாரும் மறந்துவிடக்கூடாது இந்த பேரழிவை...
0 comments:
Post a Comment