தாண்டவம் – விமர்சனம்தயாரிப்பு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய் கபூர்
எழுத்து, இயக்கம் – விஜய்
இசை – ஜி.வி. பிரகாஷ்குமார்
பாடல்கள் – நா. முத்துக்குமார்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
படத்தொகுப்பு – ஆண்டனி
வெளியான தேதி – 28 – 09 – 2012
நடிப்பு – விக்ரம், ஜெகபதி பாபு, அனுஷ்கா, எமி ஜாக்சன், நாசர், சந்தானம் , சரண்யா மற்றும் பலர்.
படத்தின் கதை சம்பந்தமான பிரச்சனையில் பல தாண்டவங்கள் நடந்து , நீதிமன்றம் வரை சென்று, தடைகளைத் தாண்டி, இயக்குனர் சங்கத்தை தடம் புரள வைத்து வந்துள்ள படம். இந்த கதைக்கா இத்தனை ஆர்பாட்டம் என படம் பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக யோசிப்பார்கள்.
2000ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘சபாஷ்’. பார்த்திபன், ரஞ்சித், திவ்யா உண்ணி, தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘சபாஷ்’ படத்தின் கதையை கொஞ்சம் பார்ப்போம்.
பார்த்திபன், ரஞ்சித் இருவரும் நண்பர்கள், பார்த்திபன் ஒரு விபத்தில் கண் பார்வை இழந்தவர். அவருடைய மனைவியான திவ்யா உண்ணி, மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். ஆனால், இதை கொலை என நம்புகிறார் பார்த்திபன், அதுவும் தன் நண்பன் ரஞ்சித் செய்திருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார். அதன் பின், பார்த்திபன் கொலையாளியை எப்படி  கண்டு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
சரி, தாண்டவம் படத்தின கதைக்கு வருவோம். விக்ரம், ஜெகபதி பாபு இருவரும் நண்பர்கள். விக்ரமின் மனைவி அனுஷ்கா. லண்டனில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பில் இறந்து போகிறார். அந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருப்பவர் விக்ரமின் நண்பரான ஜெகபதிபாபு. மனைவி மரணமடைய காரணமானவர்களை விக்ரம் எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
தயவு செய்து மேற்சொன்ன சபாஷ், தாண்டவம் படத்தின் கதைகளுக்கு தொடர்பு இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
இந்திய உளவுத்துறையின் மிகப் பெரிய அதிகாரிகளில் ஒருவராக விக்ரம். அவரும் மற்றொரு அதிகாரியுமான ஜெகபதிபாபும் நாட்டின் பாதுகாப்புக்கு பாதுகாவலர்களாக விளங்குபவர்கள். ஆனால் நண்பன் ஜெகபதிபாபுவுக்கு  தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது மிகப் பெரிய அதிகாரியான விக்ரமிற்கு தெரியவேயில்லை. தமிழ் சினிமா வழக்கப்படி கிளைமாக்சில்தான் கண்டு பிடிக்கிறார்.
விக்ரம், இந்த படத்திற்காகவும் நிறைய உழைத்திருக்கிறார் என்று சொல்வது வழக்கமான ஒன்று. அவருடைய கதாபாத்திரம் எதுவானாலும் அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். இந்த படத்திலும் அப்படியே.
ஸாரி, மிஸ்டர் ஜெகபதி பாபு. உங்க அப்பாவியான முகத்தைப் பார்த்தால் நாட்டுக்காக துரோகம் செய்கிறவர் மாதிரி தெரியலை. அடுத்த தமிழ்ப் படத்துல நல்ல கதாபாத்திரத்துல நடிச்சீங்கன்னா நல்லா இருக்கும்.
அழகாக, அம்சமாக இருக்கிறார் அனுஷ்கா. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு அனுஷ்காவின் அழகு மேல் அவ்வளவு காதல் போல. ஒவ்வொரு காட்சியிலும் அனுஷ்காவை மேலும் அழகாக காட்டியிருக்கிறார். இப்படி ஒரு அழகான மனைவியாக அமைவபரை விக்ரம் கடைசி வரை தொடமலிருப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
எமி ஜாக்சன் கேரக்டர் எதற்கென்றே தெரியவில்லை. இந்த கதாபாத்திரத்தால் படத்தில் எந்த பயனுமில்லை. லட்சுமி ராயும் படத்தில் இருக்கிறார்.
லண்டன் போலீஸ் அதிகாரியாக நாசர். இலங்கைத் தமிழ் பேசி மட்டுமே கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
சந்தானம் ஓரிரு காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். கொலைகள் நடக்கும் போதெல்லாம் சந்தானம் அங்கு வந்து மாட்டிக் கொள்வது, நாம் தமிழ் சினிமாதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.
பிளாஷ்பேக்கில் வரும் கிராமத்து காட்சிகள் இனிமை. சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், சுஜிதா, தம்பி ராமையா, அனுஷ்காவின் தங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் சுவாரசியமாக அமைந்துள்ளன.
ஜி.வி. பிரகாஷ்குமாரின் 25வது படம். ஒரு பாதி கதவு…., அனிச்சம் பூவழகி…, உயிரின் உயிரே….., ரசிக்க வைத்துள்ளன. மெலோடி பாடல்களில் அசத்துகிறார் ஜி.வி.
2 மணி நேரம் 47 நிமிடம் ஓடும் படத்தில் ஆண்டனி கத்திரியை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
தாண்டவம் – வெற்றிக் கோட்டை தாண்டாது.
- screen4screen

0 comments:

Post a Comment

வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content