தமிழ் டைடிங்ஸ்

செய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை

Tamil Tidings

News-World-Business-Entertainmemt-Technology-Sports-Lifesyle

Tamiltidings on twitter

Follow us twitter

facebook - Tamiltidings

Share and Like the updates

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

டிசம்பர் 2 - போபால் பேரழிவு: நீதி?

1984 டிசம்பர் 2 நள்ளிரவு 12.00 மணி
. மத்திய பிரதேச மாநிலம். போபால் நகரம். எல்லாப் பொழுதுகளையும் போலவே அன்றைய பொழுதும் கழியும் என்று வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தனர் மக்கள். அன்றைய பொழுதின் வேலைகளை முடித்த திருப்தியோடு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். விளையாடி முடித்த களைப்பில் பெற்றோரின் அரவணைப்பில் இனிமையான கனவுகளோடு குழந்தைகள் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். தொலைக்காட்சி பரவியிருக்காத நேரம், ஊரே நிசப்தமாக தூங்கிக் கொண்டிருந்தது. சில இடங்களில் மட்டும், டிரான்சிஸ்டரில் கிஷோர் குமாரும், லதா மங்கேஷ்கரும் காலங்களைக் கடந்த தங்கள் இனிய குரல்களில் இரவின் அமைதியை தாலாட்டிக் கொண்டிருந்தனர்.

போபால் மாநகரின் ஜெயபிரகாஷ் நகரில் ஹசீரா பீவி தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாரோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அந்த அமைதியை சட்டென்று குலைத்துப் போடும் வகையில், திடீரென்று அவரது கணவர் கடுமையாக இருமத் தொடங்கினார். "யாரோ மிளகாயை எரிக்கிறாங்க போல இருக்கு" என்றார். ஹசீரா பீவிக்கும் இருமல் கடுமையாக வந்தது. மிளகாயை எரிப்பதால் இப்படி மூச்சை முட்டும் புகை வராது. வெளியே பரபரவென்று ஏதோ பெரும் இரைச்சல் கேட்டது. மக்கள் ஓலமிட்டுக் கொண்டு ஓடியது போலிருந்தது. அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஹசீராவுக்கு தனது 11 மாத பச்சிளங் குழந்தையின் மீதே எல்லா கவனமும் சென்றது. ஏதோ பெரிய ஆபத்து என்று உணர்ந்து கொண்ட அவர், ஒரு போர்வையில் குழந்தையைச் சுற்றி கையில் எடுத்துக் கொள்ள, அவரது கணவர் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொள்ள, தனது மாமியாரோடு வீட்டை விட்டு வெளியில் வந்தார் ஹசீரா.

தெருவெங்கும் மக்கள் அலறிக் கொண்டு பல்வேறு திசைகளில் ஓடிக் கொண்டிருந்தனர். எங்கும் ஒரே குழப்பம். அலறல். கூச்சல். கூட்டத்தோடு ஓடிய ஹசீரா மக்களோடு மக்களாக அருகில் இருந்த ஒரு கல்லூரிக்குள் அடைக்கலம் புகுந்தார். அங்கு சென்ற பிறகுதான் அவசரத்தில் தனது 4 வயது மகனை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. தலைதெறிக்க மீண்டும் வீட்டுக்கு ஒடினார். இறந்து விட்டான் என்று நினைத்து தனது மகனை பிணங்களோடு வண்டியில் கிடத்தி வைத்திருந்ததை கண்டார்.

இது ஹசீராவின் கதை மட்டுமல்ல...போபால் நகரில் அன்று இரவு வாழ்ந்த அனைவருக்கும் இப்படித்தான் நேர்ந்தது. என்ன நடந்தது என்று உணர்வதற்குள்ளாக அன்று இரவே 4000 மக்கள் ஈக்களைப் போல் செத்து விழுந்தனர். யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த ஜெயப்பிரகாஷ் நகர், காஜி கேம்ப், சோளா கஞ்ச் மற்றும் ரயில்வே காலனி பகுதியில் வசித்த அனைவரும் கடும் பாதிப்புக்குள்ளாயினர். மூன்று நாட்களுக்குள் 8000 பேர் செத்து மடிந்தனர். அடுத்த சில ஆண்டுகளுக்குள் 15000க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மொத்தத்தில் இந்த விஷ வாயு பேரழிவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.
இவ்வளவுக்கும் காரணமாக இருந்த பூச்சி மருந்து தயாரிக்கும் யூனியன் கார்பைட் ஆலை 1969ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் போபால் மாநகரத்தில் உருவாக்கப்பட்டது. மோசமான பூச்சிக்கொல்லியாக உருவெடுத்திருந்த, சர்ச்சைக்குரிய டி.டி.ட்டி எனப்படும் டைக்ளோரோபினைல் ட்ரைக்ளோரோ ஈதேன் என்ற வேதிப்பொருளுக்கு மாற்றாக "செவின்" என்ற பூச்சிக்கொல்லியை தயாரிப்பதற்காக அது நிறுவப்பட்டிருந்தது. அந்தப் பூச்சிக் கொல்லி தயாரிக்க தேவையான முக்கிய வேதிப்பொருள் "மீதைல் ஐசோ சயனேட்" என்ற கொடிய விஷம்.

தொழிற்சாலையின் மூன்று தொட்டிகளில் 60 டன் மீதைல் ஐசோ சயனேட் அப்போது இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஒரு தொட்டியில் மட்டும், பாதுகாப்பு அளவைவிட மிக அதிகமாக 40 டன் வாயு சேமிக்கப்பட்டிருந்தது. மீதைல் ஐசோ சயனேட்டின் கொதி நிலை 31.1 டிகிரி. அறை வெப்பநிலையிலேயே காற்றில் பரவும் தன்மை கொண்டது. இந்த வேதிப்பொருள் மணம் இல்லாத தன்மை கொண்டதால், காற்றில் பரவினாலும் உடனடியாக தெரிய வாய்ப்பில்லை. கண் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலால் மட்டுமே அறிய முடியும்.

அந்த வேதிப்பொருள் குளிர் நிலை தொட்டியில் வைக்கப்பட வேண்டும். 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப்பட வேண்டும். ஆனால் சம்பவம் நடந்தபோது தொட்டி வெப்பநிலை 20 டிகிரியாக வைக்கப்பட்டிருந்தது. 1984 டிசம்பர் 2 அன்று இரவு தொழிலாளர்கள் குழாய்களை சுத்தம் செய்து முடிக்கும் தருவாயில் 610 எண் கொண்ட தொட்டியில் ஏராளமாக தண்ணீர் புகுந்தது. மீதைல் ஐசோ சயனேட் உடன் தண்ணீர் கலந்தவுடன், அது சேமிக்கப்பட்டிருந்த இரும்புத் தொட்டி கிரியாஊக்கியாக செயல்பட, வேதி மாற்றம் நடைபெற்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய விஷவாயுவாக மாறி அது காற்றில் பரவ ஆரம்பித்தது.

காற்றும் வீச, அருகிலிருந்த மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் இவ்விஷ வாயு புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை மீளாத் துயிலில் ஆழ்த்தியது. இக்காற்று பரவத் தொடங்கியதும் சுவாசித்த மக்கள் கண் எரிச்சலும், நுரையீரல் எரிச்சலும் அடைந்து சுருண்டு விழுந்தனர். இதில் இருந்து தப்பிக்க வேகமாக ஒடியவர்கள், இவ்விஷக் காற்றை வேகமாக சுவாசித்து, அதிவேகமாக மாண்டனர்.

1985ல் மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விஷ வாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக கருச்சிதைவு ஏற்பட்டது, 21 குழந்தைகள் குறையுடன் பிறந்தன, 27 குழந்தைகள் இறந்து பிறந்தன என்று தெரிவித்தார். இச்சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு பெண்களிடம் ஆய்வு நடத்தியதில் 90 சதவிகித பெண்கள் கருப்பை சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகியுள்ளதும், 79 சதவிகித பெண்களுக்கு இடுப்பு எலும்பு வீக்கமடைந்த நோயும், 75 சதவிகித பெண்களுக்கு கழுத்து எலும்பு தொடர்பான நோய்களும், 35 சதவிகித பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அதிகப்படியான ரத்தப்போக்கும், 59 சதவிகித பெண்களுக்கு பல்வேறு நோய்களும் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய அனைவரையுமே மூச்சுத் திணறல், சுவாச நோய்கள் பாதித்திருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போபால் விஷ வாயு பேரழிவு நடந்து 25 ஆண்டுகள் கழித்து, அந்தச் சம்பவம் சுற்றுச்சூழலுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம் (சி.எஸ்.இ.) ஓர் ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக, யூனியன் கார்பைட் தொழிற்சாலை, அங்கிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தண்ணீர், மண் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட 561 மடங்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நச்சு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொழிற்சாலை, அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக மாசுப்பட்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த கொடிய நச்சுகள், உடலில் நரம்பு பிரச்சினைகள், புற்றுநோய், ஈரல், எலும்பு, ரத்த அணுக்கள் உட்பட அம்சங்களை பாதித்து நோய்களை உருவாக்கும் தன்மை படைத்தவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பேரழிவு நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் இந்திய அரசு சார்பில் எந்த ஆய்வும் தொடர்ச்சியாக நடக்கவில்லை. 1994ல் இந்திய மருத்துவ ஆராய்சிக் கழகம் ஓர் ஆய்வை அரைகுறையாக கைவிட்டுள்ளது. இந்தப் பேரழிவுக்கு பெரிய பின்னணி இருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

செவின் பூச்சிக் கொல்லிக்கு சந்தையில் வரவேற்பு குறையத் தொடங்கியதால் 1984 டிசம்பர் முதல் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை மூடி விடலாம் என்று அந்நிறுவனம் ஆலோசித்து வந்தது. இந்த அம்சம் மிக முக்கியமானது. மூடப்பட உத்தேசித்திருந்த ஓர் ஆலையில் இருந்து விஷவாயு கசிவு நடந்திருக்கிறது. எப்படியோ இந்த ஆலையை மூடப் போகிறோம். இந்த விஷவாயு மக்களிடையே என்ன பாதிப்புகளை நிகழ்த்தும் என்று பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று அமெரிக்க முதலாளிகளுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் என்ன எதிர்மருந்து கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள விஷவாயுவின் பெயரை ஆலை நிர்வாகத்திடம் மருத்துவர்கள் கேட்டபோது, உடனடியாகச் சொல்ல மறுத்திருக்கிறார்கள். யூனியன் கார்பைடின் இந்தியத் தலைவர் ஆண்டர்சன் இன்று வரை கைது செய்யப்படாமல், சௌகரியமாக வாழ்ந்து வருகிறார். யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள டவ் நிறுவனம்தான் இப்பொழுதும் எவரெடி பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது.

இப்படி அன்று ஒரு நாள் நடந்த விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட பாதிப்பு, போபால் நகர மக்களை 25 ஆண்டுகளைக் கடந்தும் வதைத்துக் கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரையும், சுற்றுச் சூழலையும் சீரமைக்க முடியாத அளவுக்கு கடுமையாக மாசுபடுத்தியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் இன்றுவரை முழுமையாக கிடைக்கவில்லை. கால் நூற்றாண்டு கழிந்த பின்னரும், நிவாரணத் தொகைக்காக போராடும் மக்களை, அரசு அமைப்புகள் வழக்கம் போல இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிக் கொண்டுள்ளன. மக்களுக்கு முழுமையான நஷ்டஈடும் பெற்றுத் தரவில்லை, நீதியும் பெற்றுத் தரவில்லை, ஆய்வும் நடத்தவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் உயிரிழந்த மக்களுக்கு ரூ. 100 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்போவதாக மத்திய அரசு சொல்கிறது.

இந்தப் பேரழிவில் இருந்து அரசு எந்த பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்று வரை இதுபோன்ற விபத்துகளை எதிர்கொள்வது குறித்து எந்த திட்டமிடலும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் கடலூரில் உள்ள சிப்காட், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகள், ராணிப்பேட்டையில் உள்ள தோல் பதனிடும் ஆலைகள், சேலம் மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகள் மீதைல் ஐசோ சயனேட் போன்ற பல நச்சுப்பொருட்களை இன்றும் பயன்படுத்தி வருகின்றன. இங்கு அவ்வப்போது நடைபெறும் சிறுவிபத்துகளும் உரிய முறையில் கவனம் செலுத்தப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன. எத்தனை போபால்கள் நடந்தாலும், அரசு திருந்தப்போவதில்லை. பரிசோதனைக்கூட எலிகளாக நம்மை பயன்படுத்தும் இந்தப் போக்கை எப்படி தடுத்து நிறுத்துவது?

போபால் பேரழிவு - முக்கிய தகவல்கள்
நிறுவனம் - யூனியன் கார்பைடு (தற்போது டவ்) எவரெடி பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் தயாரித்த பொருள் - நாம் அன்றாடம் சாப்பிடும் தானியப் பயிர்களின் மீது தெளிக்கப்படும் செவின் பூச்சிக்கொல்லி. இதுதான் உடனடியாக 5,000 பேரைக் கொன்றது வெளியான வாயு - மீதைல் ஐசோ சயனேட். கண் எரிச்சல், நுரையீரல் அடைப்பு ஏற்படுத்தி பார்வையை பறிக்கும், இறப்பை ஏற்படுத்தும் மணமற்ற வாயு.

பேரழிவு நடந்த நாள் - டிசம்பர் 2 நள்ளிரவுக்கு மேல், 1984
இறந்தவர்கள் எண்ணிக்கை - உடனடியாக 5,000 பேர் இறந்தனர். சில மாதங்களில் 15,000 பேர் இறந்தனர். 5,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கு தண்டிக்கப்பட்டவர்கள் - யாருமில்லை. கைதுகூட செய்யப்படவில்லை. இந்தியப் பிரிவுத் தலைவர் வாரன் ஆண்டர்சன், அமெரிக்க தீவில் உல்லாசமாக இருக்கிறார்.
நஷ்ட ஈடு கேட்கப்பட்டது - ரூ. 1500 கோடி
நஷ்ட ஈடு தரப்பட்டது - ரூ. 250 கோடி
(உச்ச நீதிமன்றம் மூலம்)

நன்றி : அ.சங்கர்,  வலை: கீற்று.


யாரும் மறந்துவிடக்கூடாது இந்த பேரழிவை...

நம் சமுதாயம்: சமுதாய அக்கறை உள்ளவரா நீங்கள்! உங்கள் குரல் ஒலிக்க!



நம் சமுதாயம் - இந்த பகுதி சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தவே, எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த வாயிலின் வழியாக தெரியப்படுத்தலாம். இதன் மூலம் உங்களுடைய எண்ணங்கள், கேள்விகள் மற்றும் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது வெறும் வெளிப்படுத்தும் இடம் மட்டும் அல்ல, அதற்கான தீர்வு, சரி செய்யும் வழிமுறைகள், சரியான இடத்திற்கு பிரச்சனையை எடுத்துச் செல்லும் வழிகள் என எதுவாக இருந்தாலும் விவாதிக்கலாம். இது ஒரு தொடக்கமே, சிறு துளியாக நாங்கள் தொடங்குகிறோம் அதை வெள்ளமாக மாற்ற வேண்டியது நீங்கள்தான்.

2 ஜி ஊழல், மின் வெட்டு, விலைவாசி உயர்வு, குண்டும் குழியுமான‌ சாலை எனச் சமுதாயப் பிரச்சனை எதுவாயினும், கிராம‌மோ (அ) நகரமோ உங்கள் பிரச்சனையோ, பொதுப்பிரச்சனையோ (அ) அரசாங்கத்தில் சந்திக்க நேரிடும் இடர்பாடுகளோ எதுவாயினும், அதனை ஒரு கட்டுரையாக (அ) ஒரு தொகுப்பாக,  ஆங்கிலத்திலோ அ தமிழிலோ, புகைப்படத்துடனோ தட்டச்சு செய்து நம் சமுதாயம் என்ற தலைப்பில் எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

சமுதாய பிரச்சனைகளுக்காக ஒன்று பட்டு குரல் கொடுப்போம் 


தமிழ் டைடிங்ஸின் ஆசிரியரின் அனுமதிக்கு பிறகு உடனே இந்த வலைப்பூவில் உங்கள் பெயருடன் பிரசுரிக்க (அ) வெளியிடப்படும் . (பிரச்சனைகளை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பினால் அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.)

மின்னஞ்சல் முகவரி:  tamiltidings@gmail.com

இன்று முதல் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடை அடைப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல்  6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று முழுமையான கடை அடைப்பு நாளை முதல் தொடங்குகிறது. இன்று மாலை 5 மணி வரை கடைகள் இயங்கும். இன்று 5  மணி முதல் விடுமுறை தொடங்கும். உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த முடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முழுவதும் 6,691 மதுக்கடைகள் உள்ளன, அதில் சென்னையில் மட்டும் 482. நேற்று முதல் விற்பனை அதிகரித்துள்ளது. இன்றும் விற்பனை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் இருப்பு வைத்துள்ளனர். கட்சிகளும் தங்களுக்கு தேவையானதை வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர்.

குடிமகன்களுக்கு 6 நாட்கள் திண்டாட்டம்தான்!

பிளாஸ்டிக் பைகளை தடை செய்த அரசு

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. 1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, இதற்கான வரைவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்படுத்துவது, வைத்திருத்தல் உள்ளிட்டவை முற்றிலுமாக தடை செய்யப்பட உள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ அல்லது இவை இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்எஸ்

தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகரிக்கும்! - அதிகாரி தகவல்

தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் வெட்டின் அளவு இரண்டரை மணி நேரத்துக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


மின் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாட்டில் மின்வெட்டு இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.   மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் சீரமைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின் நிலையங்களை விரைவில் திறக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2012-க்கு பிறகு தமிழ் நாட்டில் மின்வெட்டு இருக்காது என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறி வருகிறார்.


 தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்கப்படுகிறது.   கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகமாக இருந்தது. நகரங்களில் 2 மணி நேரமும் கிராம பகுதிகளில் 4 மணி நேரம் வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு மின் வினியோகம் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை உள்ளிட்ட நகரங்களில் தினமும் 1 மணி நேரமும், மற்ற பகுதிகளில் 2 மணி நேரமும் மின்வெட்டு நடை முறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மின் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், சென்னை தவிர மற்ற இடங்களில் கூடுதல் மின்வெட்டு இருந்து வருகிறது. கிராம பகுதிகளில் மீண்டும் 3 முதல் 4 மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலை உருவானது. கூடுதல் மின்வெட்டுக்கு காரணம் என்ன என்பது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தமிழ்நாட்டுக்கு சுமார் 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. அந்த அளவு மின் உற்பத்தி இல்லாததால் தட்டுபாடு உள்ளது.

மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவக் காற்று நன்றாக வீசியதால் காற்றாலை உற்பத்தி நன்றாக இருந்தது.

தெலங்கானா பிரச்னை:

தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை அளிப்பதில் ஆந்திர மாநிலம் சிங்க்ரனி பகுதியில் உள்ள சுரங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தச் சுரங்கத்திலுள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கியிருந்து நிலக்கரி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

நிலக்கரி கையிருப்பு உள்ள நிலையில், அனல்மின் நிலையங்கள் மூலம் மின்சார உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது.

பண்டிகைக் காலங்கள் :

தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கி வருவதால் துணிகள் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதிகநேரம் இயந்திரங்கள் இயக்கப்படுவதால் மின்சாரத் தேவையின் அளவு கூடுதலாகி உள்ளது. இந்தச் சூழ்நிலைகளை சமாளித்து மக்களுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது.

மின்சாரத்தை வெளிச் சந்தையில் இப்போது பெறமுடியாத நிலை உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார பற்றாக்குறை நிலவுவதால், ஒரு யூனிட் ரூ. 12 அளவுக்கு விற்கப்படுகிறது. அந்த அளவில் மின்சாரத்தை பெறமுடியாத சூழல் மின்சார வாரியத்துக்கு இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசுக்கு சொந்தமான ராமகுண்டம் அனல்நிலையம் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1000 மெகாவாட் மின்சாரம் வரவில்லை. காற்றின் வேகம் குறைந்து விட்டதால் காற்றாலை மின் உற்பத்தியும் தற்போது குறைந்துள்ளது. இதனால் சில தினங்களாக தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

பிரச்சினையை சமாளிக்க இன்று முதல் வெளி மாநிலங்களில் உள்ள தனியார் மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து கூடுதல் விலைக்கு 500 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்தையும் மற்ற மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த மாதம் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

காற்று வேகம் அதிகரித்தால் மீண்டும் மின் உற்பத்தி அதிகரிக்கும். வெளி மாநிலங்களில் இருந்து வாங்கும் மின்சாரத்தின் அளவும் 2 நாளில் அதிகமாகும். அதன் பிறகு நிலைமை சீரடையும். 6ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலைமை திரும்பும் என்று அவர் கூறினார்.

டிஎன்எஸ்

மதுரை புறநகரில் 5 மணிநேரம் மின்வெட்டு


 மதுரை புறநகரில் அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேர மின் தடையுடன், கூடுதலாக மூன்று மணி நேர மின் தடை ஏற்படுகிறது.

மதுரையில் அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேர மின் தடையும், சில நாட்களாக அறிவிக்கப்படாத பல மணி நேர மின் தடையும் தொடர்கிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும், அவ்வப்போது சராசரியாக 30 நிமிடங்கள் மின் தடை ஏற்பட்டது. பல பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நேற்று முன்தினம் காலை 9 முதல் மாலை 6 மணி வரை வழக்கமான மின் தடை இருந்தது. எனினும், அன்றைய தினம் இரவு முழுவதும் திடீர், திடீரென மின் தடை ஏற்பட்டது.

நாராயணபுரம் பகுதியில் சுழற்சி முறையில் நேற்று காலை 6 முதல் காலை 8 மணி வரை இரண்டு மணி நேர மின் தடை இருந்தது. எனினும், இதற்கு மாறாக காலை 6 முதல் 9 மணி வரை என, மூன்று மணி நேரமாக மின் தடை நீட்டிக்கப்பட்டது. பகலில் பத்து நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது.

மதுரை புறநகரில் அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேர மின் தடையுடன், கூடுதலாக மூன்று மணி நேர மின் தடை ஏற்படுகிறது. மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஆ.நச்சாடலிங்கம் கூறும்போது, 'காற்றாலை மின் உற்பத்தி 2,000 மெகாவாட்டில் இருந்து 1,000 முதல் 900 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதனால், மின் தடை ஏற்படுகிறது. தற்போது காற்றாலை மின் உற்பத்திக்கு உகந்த காலமாக இருந்தாலும் காற்று இல்லாததால் உற்பத்தி குறைந்துள்ளது,' என்றார்.

டிஎன்எஸ்

பத்தாம் வகுப்பு கூட தேறாதவர், கல்வித்துறை அமைச்சரா?

கல்வித்துறைக்கு அமைச்சராக இருப்பவர் இந்த வருட பத்தாம் வகுப்பு எழுதியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் கல்வித்துறைக்கு அமைச்சர் பி.எம்.எல்.கல்யாணசுந்தரம், இவர் 1991 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்துள்ளார். பின்பு அவர் சகோதரர் பார்த்துக் கொண்டிருந்த தொழிலுக்கு உதவியுள்ளார். பத்து வருடங்கள் கழித்து அரசியலுக்குள் நுழைந்த கல்யாணசுந்தரம், 2006ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

20 வருடங்கள் கழித்து மீண்டும், யாரும் தெரிந்து கொள்ள கூடாது எனத் தேர்வினை திண்டிவனதிற்கு வந்து எழுதியுள்ளார். "அவர் நேற்று அறிவியல் தேர்வினை வந்து எழுதினார், ஆனால் சமூக அறிவியல் பாடத்திற்கு அவர் வரவில்லை. அவரின் புகைப்படம் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுடன் பொருந்தியது" என திண்டிவனம் கல்வித்துறை அதிகாரி ஷண்முகம் தெரிவித்தார்.

"தேர்விற்கு நண்பர்கள் உதவியுடன் படித்தேன், நேற்று அறிவியல் பாடம் எழுதினேன், ஆனால் சமூக அறிவியல் தேர்விற்கு போக முடியவில்லை." என்று கல்யாணசுந்தரம் கூறினார்.அமைச்சர் ஆன பிறகு சென்னை திறந்த பல்கலைகழகத்தில் அவர் பி.ஏ. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

கல்வியே ஒழுங்காக தாண்டாதவர் எப்படி புதுவை மாநிலத்தின் கல்வித்துறைக்கு அமைச்சரானார்? எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.140, கியாஸ் சிலிண்டர் ரூ.2000!!!


ஆம்,  பெட்ரோல் (கல்லெண்ணெய்) விலை லிட்டருக்கு ரூ.140க்கும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் (வாயூகலன்/வளிக்கலன்) ஒன்றின் விலை ரூ.2000க்கும் விற்கப்படுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இந்த விலை உயர்வு நிலவி உள்ளது. கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் சாலை மறியல் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறியுள்ளது.  நாகா  குகி பழங்குடியினர் நடத்தும் இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 சதார் மலைப்பகுதியை வருவாய் மாவட்டமாக மாற்றக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் என்ஹெச்-39 மற்றும் என்ஹெச்-53 ஆகிய 2 தேசிய நெடுஞ்சாலைகளில்  சாலை மறியல் நடத்துகின்றனர்.

சன் நெட்வொர்கிலிருந்து சக்சேனா விலகல்


சன் குழுமத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன் கலாநிதி மாறனின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படும் ஹன்ஸ்ராஜ் சக்சேனா  விலகிவிட்டதாக அவரது வழக்கறிஞர் செந்தில்குமார் தெரிவித்தார். இந்த நிலையில், சக்சேனா   சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார்.

சக்சேனா சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்தவர். இவர் பல்வேறு வழக்குகளில் சிக்கி இரண்டரை மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 14ஆம் தேதிதான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் 16 வழக்குகளை சந்திப்பதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பயப்பட மாட்டேன் தவறை தட்டிக் கேட்பேன் : விஜயகாந்த்


சென்னை மாநகராட்சி தேமுதிக மேயர் வேட்பாளர்   வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்  மயிலாப்பூரில் நடந்தது. வேட்பாளர்களை அறிமுகம் செய்து விஜயகாந்த் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறோம். இன்னொரு கம்யூனிஸ்டு கட்சியும் எங்களுடன் வர இருக்கிறது. நம்பினோர் கைவிடப்படார். பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி என்கிறீர்கள்.

கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்றார். இப்போதும் சொல்கிறேன் மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பப்படிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் கூட்டணி வைத்தேன். இப்போதுள்ள ஆட்சியை 6 மாதம் குறை  சொல்ல மாட்டேன்.  இப்போது எங்களால் என்ன செய்ய முடியும்?

தமிழகத்தின் முன்னேற்றம்  மற்றும் தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம். போலீசார் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்சினைகள் சரியாகி விடும். நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சிக்குதான் ஓட்டளிக்க வேண்டும்  என்பதல்ல. தே.மு.தி.க.வுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன்.

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல திட்டங்களை தே.மு.தி.க. வைத்துள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் இத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

இவ்வாறு  விஜயகாந்த் கூறினார்.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், பார்த்தசாரதி எம்.எல்.ஏ., எல்.கே.சதீஷ், மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன்,  செந்தாமரைக் கண்ணன், வி.யுவராஜ், தொழிற்சங்க மாநில செயலாளர் சவுந்தர பாண்டியன், கே.எஸ்.மலர் மன்னன், தேனாம்பேட்டை ஜி.குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டிஎன்எஸ்

ஒரே நாளில் 66 வேட்பு மனுக்கள்

தமிழ்நாட்டில் அக்டோ பர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக, திருச்சி தவிர சென்னை உள்பட 9 மாநகராட்சிகள், 60 நகரசபைகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்டடீபர் 17-ந் தேதி அன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 2-வது கட்டமாக மீதமுள்ள 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 19-ந் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

இவை தவிர தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 12 ஆயிரத்து 620 ஊராட்சிகளுக்கும் இந்த இரு நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கண்ட உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்த தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

நடைபெறவுள்ள இந்த உள்ளாட்சி தேர்தலில், இதுவரை இல்லாத அளவில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற 10-க்கு மேற்பட்ட கட்சிகள் தனித்தனியே வேட்பாளர் பட்டியலை அறிவித்து களம் இறங்கி உள்ளன.

இதனால் பலமுனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், செப்.22ஆம் தேதி தொடங்கியது. கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக இருந்ததால், தொடக்க நாட்களில் வேட்புமனு தாக்கல் மந்தமாகவே இருந்து வந்தது.

சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். நேற்று முன்தினம் வரை தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 25 ஆயிரத்து 700 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்கு, வருகிற 29ஆம் தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். நேற்று முதல் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய தொடங்கி விட்டனர்.

66 ஆயிரம் மனுக்கள்:

மனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நேற்று முதல் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாடு முழுவதும், நேற்று ஒரே நாளில் மட்டும் 66 ஆயிரம் மனுக்கள் குவிந்தன.

பலமுனை போட்டி ஏற்பட்டு, அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருவதால், இறுதி பட்டியலில் லட்சக்கணக்கில் வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சீபுரம்-திருவள்ளூர்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், நேற்று ஒரே நாளில் 1025 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 1,227.

சென்னை மேயர் பதவி 6 பேர் போட்டி:

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி, தி.மு.க. சார்பில் தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அவர்கள் தவிர, சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் மற்றும் ஜே.ஹரிதாஸ், ஆர்.டி.சேகர், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய 4 சுயேச்சை வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்து உள்ளனர்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நேற்று மட்டும் 92 பேர் மனு தாக்கல் செய்தனர்.

(டிஎன்எஸ்)

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் - திருமாவளவன்


திமுக., அதிமுக., அல்லாத மூன்றாவது அணி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சியபோது இதனை தெ‌ரி‌‌வி‌த்த அவ‌ர், பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியக் கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும் எ‌ன்றா‌ர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அ.தி.மு.க. நடந்து கொண்ட விதம் காரணமாக ம.தி.மு.க. என்ற ஒரு அரசியல் கட்சி தேர்தலையே சந்திக்க இயலாத ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்து வருகிறது. இது கூட்டணியில் உள்ள கட்சிகளை அவமானப்படுத்துவதாக உள்ளது.
 தி.மு.க.வைப் பொருத்தவரை கூட்டணியில் உள்ள கட்சிகளை கலந்தாலோசிக்காமல் தாங்கள் தனித்துப் போட்டியிடப் போவதாக திடீரென அறிவித்தது.  அக்கட்சியின் இந்தப் போக்கு எங்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது போல உள்ளது.

அதற்கு முன்னோட்டமாக வரும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மூன்றாவது வேட்பாளராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று‌‌ம் திருமாவளவன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ராஜினாமா செய்யத் தயார் ஆகும் அமைச்சர் சிதம்பரம்

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் தன் மீது புகார் கூறப்படுவதால் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நிதி அமைச்சகத்திடம் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மனது வைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் என ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதம் குறித்த தகவலை சுப்ரமணிய சுவாமி நீதிமன்றத்தில் அளித்துள்ளார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே பிரதமரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சிதம்பரம் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

எனினும் சிதம்பரத்துக்கு பிரதமர் முழுமனதுடன் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோதும், தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும்போதும் என்னுடைய முழு நம்பிக்கையுடன் அவர் பணியாற்றி வருகிறார் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் மூத்த அமைச்சர்களுக்கிடையில் எந்த வித மோதலும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தி.மு.க.விலிருந்து விலகிய நடிகர்

ஒவ்வொரு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பல கிராமம் நகரம் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வந்தும் கட்சியில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை, இதனால் மன வருத்தம் அடைந்து தி.மு.க. கட்சியிலிருந்து விலகுவதாக நடிகர் தியாகு தெரிவித்துள்ளார்.

கட்சியில் இல்லாதவர்கள் கூட திமுக தலைவரை துதி பாடியே பல்வேறு பதவிகளையும், வசதி வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பதவி பெற்றுள்ளனர். ஆனால் 33 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும் எனக்கு எந்த அங்கீகாரமும் கட்சியில் கிடைக்கவில்லை.இதிலிருந்து நீங்கள் என்னை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள் என்பது புரிந்து விட்டது. இதுவரை கட்சியில் இருந்தது தவறு என்று புரிந்து கொண்டுள்ளேன். எனவே கடந்த 19ந் தேதி முதல் கட்சியிலிருந்து விலகி கொண்டுள்ளேன். எனது விலகல் கடிதத்தை கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்பேன், என்று அவர் கூறினார்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும், தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

கே.என்.நேருவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும் மு.க.ஸ்டாலின்


நிலப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறிய புகாரில் மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். அக்.4-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் கே.என்.நேருவை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், கே என் நேரு சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அதிகாரியிடம் நாளை தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் நாளை காலை திருச்சி வருகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வருகின்றனர். அடுத்த மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
சிறையில் இருந்தபடியே நேரு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால், அதற்கு தேவையான ஆவணங்களை திமுக வக்கீல் அணியினர் தயாராக வைத்துள்ளனர். அடுத்த மாதம் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது, இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக தலைவர் கருணாநிதி திருச்சியில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ம.தி.மு.க

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிட இருக்கிறது. இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்தார். மாநகராட்சி மேயர்களுக்கான முதல் பட்டியலை இன்று வெளியிட்டார். அதன்படி சென்னை மேயர் பதவிக்கான வேட்பாளராக நா.மனோகரன், கோவைக்கு- அர்ஜூனராஜ், மதுரைக்கு- பாஸ்கர சேதுபதி, தூத்துக்குடிக்கு - பாத்திமா பாபு உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதம் இருக்கும் நரேந்திர மோடி

அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை  சனிக்கிழமை (17/9/2011) முதல் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி துவக்கியுள்ளார். மூன்று நாள் உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிகிறது. கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, அந்தக் கரையை நீக்கும் முயற்சியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இஷான் ஜாஃப்ரி கொலை வழக்கில், விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது. மோடிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது, மோடிக்கும் பாஜகவினருக்கும் ஊக்கத்தை கொடுத்துள்ளது, அது மட்டுமின்றி அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் குழு, மோடியின் ஆட்சி நிர்வாகத்தை பாராட்டியதால் அவருக்கு மேலும் சக்தியூட்டி உள்ளது. அடுத்ததாக பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று விவாதம் கிளம்பியயுள்ள நிலையில், திடீரென உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக தன் மீது பல்வேறு  அவதூறு நடந்ததாகவும், ஆனால், குஜராத் மாநிலம் எப்போதும் மனித நேயப் பாதையிலிருந்து மாறிவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாகவும், இந்த உண்ணாவிரதப் போராட்டம், யாருக்கு எதிரானதும் இல்லை, நல்லிணக்கம் தான் தமது சக்தி என்றும், தனது உண்ணாவிரதப் போராட்டம், வாக்கு வங்கி அரசியலுக்கு முடிவுகட்டும் வகையில் அமையும் என்றும் மோடி தெரிவித்தார்.

நரேந்திர மோடிக்கு, பாஜக தலைவர்கள் மட்டுமன்றி, கூட்டணிக் கட்சியான அகாலி தளமும் ஆதரவு தெரிவித்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேரில் வந்து, மோடியை வாழ்த்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். நேற்று (17 செப்டம்பர்) அவரது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பை வெளியிட்ட மன்மோகன் சிங்

அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன, பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்தில்னைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங்
, அவருக்கு நிலம் ஏதும் இல்லை என்றும், அவரது சொத்து மதிப்பு சுமார் 5 கோடி என குறிப்பிட்டுள்ளார்.
அதில், வங்கி டெபாசிட், இரண்டு வீடுகள் ஒன்று 90 மற்றும் 88 லட்சம் மதிப்புடையது , மற்றும் மாருதி கார் ஆகியவை அடங்கும். சண்கரில் ரு வீடு, டெல்லியில் ஒரு வீடு உள்ளது. வங்களில் சுமார் 3 லட்சம் டெபாசிட் வைத்திருக்கிறார். பிரதமரின் மனைவி குருஷரன் கவுர், வங்கியில் 11 லட்சம் டெபாசிட் வைத்துள்ளார்.

அமைச்சர் கமல்நாத்தின் சொத்து மதிப்பு 263 கோடி, இவருக்குதான் அதிக அளவு சொத்து இருக்கிறது. ஏண்டனியின் சொத்து மதிப்பு 39 லட்சம், பிரணாப் முகர்ஜியின் சொத்து மதிப்பு 1.25 கோடி. வீரப்ப மொய்லியின் சொத்து மதிப்பு 13 லட்சம்.

பா.சிதம்பரம் குடும்ப சொத்து 23 கோடி, அதில் சிதம்பரத்தின் பங்கு மட்டும் 11 கோடி. அதில் வங்கி டெபாசிட் 1.29 கோடியும் அடங்கும். சரத்பவாரின் சொத்து மதிப்பு 12 கோடி. அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிலங்கள், தங்கம் 7 லட்சம், வங்கி டெபாசிட் 18 லட்சம், அவரது மனைவிக்கு 32 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளன.

மு.. அழகிரி
யின் சொத்து மதிப்பு 3 கோடிக்கு மேல் மதிப்புள்ள நிலம், 7 கோடிக்கு மேற்பட்ட பணம், இரண்டு கார்கள், 1 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தங்கம். அவரது மனைவிக்கு, 5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்கள், வங்கி டெபாசிட், பணம் உள்ட 3.5 கோடி உள்ளன. 75 லட்சத்தில் ஒரு கார், 11 லட்சத்தில், தங்கம், 1.8 கோடிக்கு வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் ஆகும்.

அமைச்சரவையில் உள்ள 77 அமைச்சர்களில், ஜெயந்தி நடராஜன், திமுகவைச் சேர்ந்த ஜகத்ரட்சகன் உள்பட ஐந்து அமைச்சர்களின்
சொத்து விவரங்கள் வெளியாகவில்லை.

விஷமம் நிறைந்தவர் அமைச்சர் பா.சிதம்பரம்

விஷமம் நிறைந்தவர் அமைச்சர் பா.சிதம்பரம் - அன்னா ஹசாரே சாடல்

இந்தியாவில் புதியதொரு சக்தியாக மாறியுள்ள அன்னா ஹசாரே, அவர் உண்ணாவிரதத்தின் போது கைதானதை பற்றி  பேசுகையில், "இப்போதுள்ள இந்திய அரசு சூழ்ச்சி நிறைந்தவர்களையே கொண்டுள்ளது,  என்னை டெல்லியில் உண்ணாவிரதத்தை தொடர   விடவில்லை. ஜெ.பி.பூங்காவில் அனுமதி கொடுத்தபோதிலும் நிறைய கட்டளைகளை விதித்தது." என்றும் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தை விஷமம் நிறைந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் மராத்தியில் 'கோட்சல்' என்று குறிப்பிட்டுள்ளார். மராத்தியில் கோட்சல் என்றால் விஷமம், நேர்மையற்ற என்று பொருள். பத்திரிக்கையாளர்கள் அவரை சந்திக்கையில் அதை விளக்குமாறு கேட்டபோது,  "அவரை  'கோட்சல்' என்று ஏன் சொல்கிறேன் என்றால்,  பல தருணங்களில் அவர் பொய் கூறியுள்ளார்." என்று அன்னா ஹசாரே கூறினார்.

டெல்லி போலீசார் அவரை வீட்டில் இருந்த நேரத்தில் கைது செய்ததன் காரணத்தை கேட்டபோது, மக்களின் அமைதியை கெடுப்பதாகவும், மேலிடத்தில் இருந்து தங்களுக்கு உத்தரவு வந்ததது என்று போலீசார் கூறியதாகவும்,  பின்பு இரண்டு மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார், "வீட்டில் இருக்கும் நான் எப்படி மக்கள் அமைதியை கெடுக்க முடியும்?" என்று கேள்வியும் எழுப்பினார்.

அரசு கேபிள் டிவி செப்‍-2ம் தேதி தொடக்கம் -- ஜெயலலிதா

"கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்" என்ற‌ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டிவி ஒளிபர‌ப்பு சேவை நாளை மறுநாள் (செப்டம்பர் 2)முதல் தொடங்குகிறது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ரூ 70க்கு 90 செனல்களை காணலாம் என்று சட்டசபையில் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில்,

கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை உள்ளதாலும், இதனை சீர் படுத்துவதற்காகவும்,‌ மக்களிடம் அதிக கட்டணம் வசுலிப்பதை தவிர்க்கவும், கடந்த தி.மு.க அரசால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம் 2008 ஜூலை மாதம் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது, இந்நிறுவனம் முதலில் 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கியது.

பின்னர், இந்நிறுவனம் அதெ ஆட்சியாளர்களின் சுயநல‌த்திற்காக முடக்கப்பட்டது, இதனால் இந்த இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 31.3.2011 அன்று 432 இணைப்பாகிவிட்டது.

புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வசதியினை ஏற்படுத்தும் வகையிலும், இதனை மீண்டும் அமலில் இந்த அரசு கொண்டுவருகிறது. ஏற்கனவே தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம் புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில் நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கு கட்டுபாட்டு அறைகள் ம‌ற்ற அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் நிறுவப்படவுள்ளது, இதனை கண்கானிக்க‌ ‌முழு நேர‌ ஒரு தலைவர் நியமிககபட்டு உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்கும் பொருட்டு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.  


வலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க

review http://tamiltidings.blogspot.com on alexa.com

Total Pageviews

Feeds

rank

Indiblogger Score

பிரபலமான பதிவுகள்

Dont forget to visit often

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
back to top Title of your content